கிராமங்களை நோக்கி தி.மு.க! - மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்த தலைவர்கள்...

“மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் -  மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் கிராமங்களில் கூட்டங்களைத் தொடங்கிவிட்டது தி.மு.க. ஜனவரி 9-ம் தேதி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், பொருளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும் நடந்த கிராமக் கூட்டங்களில் பங்கேற்றனர். கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தின் முக்கிய அம்சத்தின் அடிப்படையில் மக்களுடன் மக்களாக இவர்கள் தரையில் அமர்ந்து பேசிவருவது, கட்சியினர் மட்டுமல்லாமல் கிராம மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் உருவானது தொடர்பாகப் பேசும் தி.மு.க நிர்வாகிகள், “2015-ம் ஆண்டு ‘நமக்கு நாமே’ திட்டம் ஸ்டாலினால் மேற்கொள்ளப் பட்டபோதே, ‘பேசலாம் வாங்க’ என்ற தலைப்பில் கிராம மக்களுடன் தி.மு.க நிர்வாகிகள் அமர்ந்து பேசும் திட்டம் வடிவமைக்கப்பட்டது. அப்போது, பல காரணங்களால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. அதையெல்லாம் மனதில் வைத்திருந்த ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார். தவிர, ‘என்னதான் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும், கிராம மக்களைக் கவராமல் வெற்றியைப் பெற முடியாது’ என்று ஸ்டாலினின் ‘ஓ.எம்.ஜி’ குழுவும் வலியுறுத்தியது. அதன் பின்பே,  இத் திட்டம் செயல்வடிவத்துக்கு வந்தது. தி.மு.க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. இதற்காக மாவட்டவாரியாக, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர் களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick