மிஸ்டர் கழுகு: கொ(ட)லைநாடு! - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி?

‘‘பகீர் பராக்...’’ கரகர குரல் வந்த திசையை நோக்கினால், முகம் நிறையப் பீதியுடன் நுழைந்து கொண்டிருந்தார் கழுகார்.

‘‘நீர், ‘பேட்ட’ படத்தைப் பார்த்துவிட்டது தெரிகிறது. ஆனால், ‘பகீர் பராக்’ என்கிற முன்னோட்டம்... கூடவே முகம் முழுக்கப் பீதி...’’ ஏன் என்று கேட்டோம்.

மேசையில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் ‘மொடக்... மொடக்’ என்று குடித்துமுடித்த கழுகார், ‘‘எல்லாம்தான் கேள்விப் பட்டிருப்பீரே. தெஹல்கா இணைய தளத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பற்றவைத்திருக்கும் திரி, எடப்பாடியின் தூக்கத்தைத் தொலைக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், அவரது மறைவுக்குப் பின்னர் 2017 ஏப்ரல் 23-ல் கொலை நடந்தது. நேபாளத்தைச் சேர்ந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கடுமையாகத் தாக்கப் பட்டார். முக்கியமான ஆவணங்கள் சில திருடப் பட்டதாகவும் அப்போது திக்திக் செய்திகள் வந்தன.’’

‘‘அடுத்தடுத்துகூட...’’

‘‘பொறுமை... பொறுமை... அதைச் சொல்லத் தானே நான் இருக்கிறேன். அடுத்தடுத்த நாள்களிலேயே முதல் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஏப்ரல் 28-ம் தேதி ஆத்தூர் அருகே கார் விபத்தில் பலியானார். சில மணி நேரத்திலேயே இரண்டாவதுக் குற்றவாளியான ஷயான் பயணம் செய்த கார், பாலக்காட்டில் விபத்தில் சிக்கியது. அதில் தன் மனைவி விஷ்ணுபிரியா, மகள் நீத்துவைப் பறிகொடுத்த அவர், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இப்போது இந்த ஷயான், மேத்யூவிடம் தஞ்சமடைந்துள்ளார். மேலும் அவர், எடப்பாடிக்கு எதிராகப் பேச ஆரம்பித்திருக்கிறார்.”

“ஓ...?”

“இதுதொடர்பாக, தான் கொடுத்திருக்கும் பேட்டியின் ஆரம்பத்திலேயே, ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு உண்டு’ என்று அதிர வைத்துள்ளார் மேத்யூ. தான் ஆவணப்படுத்திய சாட்சிகளின் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். கொடநாடு பங்களாவில் ஆவணங்களைக் கொள்ளையடிக்கச் சென்றபோது, ‘எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இக்காரியத்தைச் செய்கிறோம், எதற்கும் நாம் பயப்படத் தேவையில்லை’ என்று கனகராஜ் தன்னிடம் கூறியதாக வீடியோக்களில் ஷயான் கூறுகிறார். ‘ஜெயலலிதாவின் இரும்புக் கோட்டையாகக் கருதப்பட்ட அந்த எஸ்டேட். பலத்த பாதுகாப்பு வளையம் கொண்டது. அதையெல்லாம் மீறி எப்படி உள்ளே சென்றீர்கள்?’ என்ற கேள்விக்கும் தெளிவாகப் பதில் சொல்லியுள்ளார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick