விடைபெறும் பிளாஸ்டிக்... மீண்டு வரும் மஞ்சப்பை! | Plastic Material banned effects and comeback Cloth bag - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

விடைபெறும் பிளாஸ்டிக்... மீண்டு வரும் மஞ்சப்பை!

பொங்கலையொட்டி ஒரு மகிழ்ச்சியான விஷயம்... தமிழக வீதிகளில் துணிப்பை, தூக்குச்சட்டி சகிதமாக மக்கள் நடமாடும் காட்சிகளை சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான உணவகங்களில் வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது. இனிப்பகங்கள் மீண்டும் பனைஓலைப் பெட்டிகளுக்கு மாறிவருகின்றன. ஜவுளிக்கடைகளில் துணிப்பைகள் வழங்கப்படுகின்றன. மளிகைக்கடைகளில் பழைய பேப்பரில் பொருள்களைப் பொட்டலம் கட்டித் தருகிறார்கள். பல்வேறு தரப்பினரும் பிளாஸ்டிக்கைத் தூக்கியெறிந்துவிட்டுப் பழைய நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

2019, ஜனவரி 1-ம் தேதி முதல் 14 பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை என்கிற தமிழக அரசின் உத்தரவு அமலுக்கு வந்து, பெருவாரியான மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். அரசு அதிகாரிகளின் சோதனை, விழிப்பு உணர்வுப் பிரசாரம் போன்ற நடவடிக்கைகளால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக வாழை இலை, தாமரை இலை, காகித கவர், துணிப்பை போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. பயோ பிளாஸ்டிக் எனப்படும் மட்கும் பிளாஸ்டிக் தடை செய்யப்படவில்லை. அதனால் இந்த கவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பாக்கு மட்டைகள், பனை ஓலைப் பொருள்கள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பழைய செய்தித்தாள்களை வாங்கி கவர்கள் செய்யும் தொழிலைப் பலர் ஆரம்பித்துள்ளனர். சணல் பை, துணிப்பை, காகிதப்பை போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றுத் தரும் பயிற்சி நிலையங்களும் உருவாகிவருகின்றன.