“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி! | Palaniswami will do anything for the post - Says Mathew Samuel - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி!

கொடநாடு விவகாரம் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்த விவகாரத்தை இப்போது பற்றவைத்திருக்கும் ‘தெஹல்கா’வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ‘தமிழக முதல்வர் எடப்பாடிதான் இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருக்கிறார்’ என்கிற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஷயான், மனோஜ் இருவர் கைதுசெய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் மேத்யூ சாமுவேல், தமிழக போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்தச் சூழலில், மேத்யூவைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்களை சில அரசியல் கட்சிகள் இயக்குவதாகவும், அவர்களுக்காகத்தான் இந்த ஆவணப்படத்தை நீங்கள் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறதே?”

“அப்படி எதுவுமே இல்லை. இது என் வேலை. எனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. என் பின்புலத்தை விசாரித்தாலே, எனக்கும் கட்சிகளுக்கும் தொடர்பு இருக்காது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.”

“டிரைவர் கனகராஜ் உயிருடன் இல்லாத நிலையில், எடப்பாடி பற்றி அவர் கூறியதையெல்லாம் உண்மை என்று எப்படி நம்புவது?”

“கனகராஜ்தான் இந்தக் கொள்ளைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்தான் ஷயானைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். கனகராஜ் சொல்லித்தான் இங்கு எல்லாமே நடந்தன. கனகராஜுக்கு உயர்மட்டத்திலிருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால்தான், அவரும் துணிந்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். இவை எல்லாமே ஷயானின் வீடியோ ஆதாரத்தில் பதிவாகியிருக்கிறது. சரி, கனகராஜ் சொல்ல வில்லையென்றால் வேறு யார் சொல்லியிருப்பார்கள்? நீங்களே யூகியுங்கள்.”