பின்தங்கிய கிராமப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க மத்திய அரசு முன்வந்தபோதிலும், அதற்குத் தேவையான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதற்காக அந்தக் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதிலும், மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம், ஆசீர்வாதபுரம் உட்பட 13 குக்கிராமங்களை உள்ளடக்கியது, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி. வேலைவாய்ப்பில் பின்தங்கிய இந்த ஊராட்சியை 2014-ம் ஆண்டில், தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி தத்தெடுத்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளித்தல், பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தல் எனப் பல்வேறு திட்டங்களை இங்கு கனிமொழி செயல்படுத்திவருகிறார். இதன் தொடர்ச்சியாக அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்த, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டுவர அவர் முயற்சி எடுத்துவருகிறார். இதுதொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகரிடமும் பலமுறை கனிமொழி பேசியிருக்கிறார். பள்ளிக்கான இடத்தைத் தமிழக அரசு வழங்கினால், உடனடியாகப் பள்ளியை அமைப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அரசியல் காரணமாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.