திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது! | Pulled down in Tripura, Lenin to rise in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

திரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது!

செங்கொடிகள், சிவப்புத் தோரணங்கள் என ஒரே செம்மயமாகக் காட்சியளிக்கிறது நெல்லை ரெட்டியார்பட்டி. அங்கே இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான ‘ஏ.பி இல்லம்’ வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் சிலை.

“உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியிலே உயர்ந்து நிற்கும் லெனின் வடிவம்...

வீழ்வோம் என்று நினைத்தாரோ,

மண்ணில் சாய்வோம் என்று உடைத்தாரோ,

உடைந்து விழுந்த ஒவ்வொரு துண்டும் ஓராயிரம் லெனின்களாய் எழுந்துவரும்...

உடைத்த கரங்கள் அத்தனையும் சரித்திரத்தில் குப்பைகளாகும்...”

- பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் குரல் ஸ்பீக்கரில் ஓங்கி ஒலிக்கிறது!

“திரிபுராவில் வீழ்த்தப்பட்ட லெனின் சிலையை திருநெல்வேலியில் எழுப்பியுள் ளோம், பாருங்கள்...” என்று, 12 அடி உயரத்திலிருக்கும் லெனின் சிலையைக் காண்பித்தார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன். கூடவே, லெனின் சிலை உருவானதற் கானப் பின்னணியையும் அவர் விவரித்தார். “கடந்த ஆண்டு, திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்து, பி.ஜே.பி முன்னணியில் இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் வன்முறையில் ஈடுபட்ட சங் பரிவார் அமைப்பினர், அங்கிருந்த லெனின் சிலையை உடைத்தார்கள். அங்கே, இடது முன்னணி ஆட்சியில் இருந்ததற்கு லெனின் சிந்தனைகளே காரணம் என்பதால், அவரது சிலை உடைக்கப்பட்டது. அதைக் கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில், லெனின் படங்களை உயர்த்திப் பிடித்தபடியே அனைவரும் பங்கேற்றனர். அப்போதே, ‘லெனின் சிலையை இங்கு அமைக்க வேண்டும்’ என்ற விருப்பத்தை எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் வெளிப்படுத்தினர். அதுபற்றி ஓவியர் சந்ருவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உடைக்கப்பட்ட லெனின் சிலையை நாம் எழுப்புவோம். நானே சிலையைச் செய்துகொடுக்கிறேன்’ என்று உற்சாகத்துடன் சொன்னார். இதோ, இன்று அந்தச் சிலை கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது’’ என்றார் பெருமிதத்துடன்.