“எங்கள் வாயை மூட எதையும் செய்வார் எடப்பாடி!” - ஷயான் காட்டம் | Shayan interview about Kodanad estate crime issues - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

“எங்கள் வாயை மூட எதையும் செய்வார் எடப்பாடி!” - ஷயான் காட்டம்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய ஷயான், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு உள்ளது என்று கனகராஜ் சொன்னதால்தான் இதையெல்லாம் செய்தேன்’ என்று வாய்திறந்த அன்று உருவான அதிர்வலைகள் இன்று வரை ஓயவில்லை. இந்த விஷயம்தான் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சுழன்றுகொண்டே இருக்கிறது. எடப்பாடியே, பொங்கி எழுந்து திட்டித்தீர்க்கும் அளவுக்கு விஷயம் சீரியஸாகிக் கொண்டுள்ளது. இந்நிலையில், நாம் முன்வைத்த கேள்விகளுக்கு தயங்காமல் பதில்களைத் தந்தார் ஷயான்.

“மேத்யூ சாமுவேலை ஏன் சந்தித்தீர்கள்?”

“நாங்கள் சொன்ன எதையும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், எனக்குத் தெரிந்த டிரைவர் ஒருவர் மூலமாக மேத்யூ சாமுவேலைத் தொடர்புகொண்டோம். இருமுறை எங்களைச் சந்தித்து, நாங்கள் சொன்ன விஷயங்களை உறுதிப்படுத்திக்கொண்டுதான், அந்த ஆவணப்படத்தை அவர் எடுத்தார்.”

“டிரைவர் கனகராஜை எப்படித் தெரியும்?”

“ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எங்கள் பேக்கரி ஓனரின் நண்பர் மூலமாக அறிமுகமானார். கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க வேண்டுமென அவர் சொன்னதும், பெரிய இடத்து விஷயம் என்று பயந்து விலகினேன். மீண்டும் தொடர்புகொண்டு, பெரிய தலைகளுக்கு இதில் பங்கிருப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று கூறினார். அப்போதும் நான் நம்பவில்லை. ஜெயலலிதா மறைந்து எடப்பாடி முதல்வரானார். அப்போது, செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை எனக்கு கனகராஜ் அனுப்பினார். அதன் பிறகே நம்பினேன்.”