‘‘பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்!’’ - புது பூகம்பம் கிளப்பும் வரதராஜன் | Kodanad Estate crime issue - Mathew Samuel vs Varatharajan - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

‘‘பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்!’’ - புது பூகம்பம் கிளப்பும் வரதராஜன்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் இப்போது பூதாகரமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல். இப்போது, அவர் மீதே புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறது.

“அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டிப் பணம்பறிப்பதுதான் மேத்யூ சாமுவேலின் வேலை” என்று திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகேயுள்ள காட்டுப்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷம் காட்டினார். “பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்” என்று எடப்பாடி கூறிய பிறகு, மேத்யூ சாமுவேல் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது. ‘அவர் அப்படிப்பட்ட ஆளா? இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படித் தெரியும்?’ என்று நாலாப் புறங்களிலிருந்தும் கேள்விகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.

இதன் பின்னணியை நாம் ஆராய ஆரம்பித்தபோது, இந்த விவரங்கள் எல்லாம் முதல்வர் வரை சென்றதே... துப்பறியும் நிபுணரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வரதராஜன் மூலமாகத்தான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் தொடர்புகொண்டு கேட்டோம்.

“மேத்யூ பற்றிய தகவல்களைத் தேடித்தேடிக் கண்டறிந்தேன். ஆனால், இதையெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக நான் செய்யவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். அனைத்துமே இணையதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன” என்று முன்னுரை கொடுத்துவிட்டு ஆரம்பித்தார், வரதராஜன்.

“இப்படிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் மேத்யூ சாமுவேல் யார்... அவரது தைரியத்தின் பின்னணி என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் இணையதளத்தில் தேடினேன். அவரின் பாஸிட்டிவ் பக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு நெகட்டிவ் பக்கங்களும் இருப்பதைக் கண்டு அதிர்ந்தேன். அதன்பிறகு, எனக்குத் தெரிந்த சோர்ஸ்கள் மூலமும் மேத்யூ பற்றிய தகவல்களைத் திரட்டினேன். பிறகு, சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இதையெல்லாம் ஜனவரி 17 அன்று தெரியப்படுத்தினேன். அடுத்த நாள், ஆதாரங்களையெல்லாம் கொடுத்தேன். மறுநாள்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி மேடையிலேயே பேசியுள்ளார்’’ என்றவர், தொடர்ந்தார்.