மிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க? - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்... | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

மிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க? - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...

சிறகெல்லாம் மஞ்சளும் குங்குமமும் மணக்க மங்கலகரமாக வந்துசேர்ந்தார் கழுகார். ‘‘வருகிற வழியில் இரண்டு மூன்று யாகங்களுக்கு விசிட் அடிக்க வேண்டியதாகிவிட்டது. அதைப் பற்றி நடுநடுவே சொல்கிறேன்’’ என்று சிரித்தபடியே சொன்ன கழுகார், நம் கணினித்திரையில் விரிந்திருந்த இந்த இதழுக்கான, ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி... அ.தி.மு.க-வுக்குச் சுகமா, சுமையா?’ என்ற கட்டுரையில் சற்றே கண் பதித்தார். ‘’அடடா... இந்த விஷயங்களைத்தான் நான் அள்ளி வந்திருக்கிறேன். நீர் கேள்விகளாகக் கேளும்’’ என்று சொல்லித் தயாரானார்.

“அ.தி.மு.க-வில் மீண்டும் அதிரடிகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டனவே?”

‘‘தேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடிகளும் ஆரம்பித்திருக்கிறது’’

‘‘பின்னணியைச் சொல்லும்?’’

‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதில் பி.ஜே.பி ஒற்றைக்காலில் நிற்கிறது. அ.தி.மு.க-விலோ, ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் திரும்பி நிற்கிறார்கள். பி.ஜே.பி தரப்புடன் கூட்டணி வேண்டும் என ஒரு டீம் தனியாக வேலை செய்ய, மற்றொரு தரப்போ கூட்டணி அமைந்துவிடக் கூடாது என தம்பிதுரை தலைமையில் செயல்படுகிறது. ‘பி.ஜே.பி-யை தூக்கிச்சுமக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்கு இல்லை’ என அவர் சொன்னக் கருத்துக்கு கட்சிக்குள் பரவலான வரவேற்பு கிடைத் துள்ளது.’’

‘‘இதனால், மேலிடத்தின் உஷ்ணப் பார்வைக்கு ஆளாக வேண்டியிருக்குமே?”

‘‘உண்மைதான். ஆனால், தம்பிதுரையைத் தட்டிவைக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம் எடப்பாடி. தனக்கும் மத்திய அரசின் மீதும், பி.ஜே.பி மீதும் கோபம் இருந்தாலும், அவர்களைப் பகைத்துக் கொண்டால் சிக்கல் என்பது அவருக்குத் தெரியும். எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் இறுக்கத்திலேயே இருக்கிறாராம் எடப்பாடி. நாடாளுமன்றத்திலும் ரஃபேல் விமான விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தம்பிதுரை பொங்கியதைப் பார்த்து ராகுல் கைதட்டித் தீர்த்தார். இந்த விஷயம் மோடி உள்பட பி.ஜே.பி-யினரை மேலும்  உஷ்ணமாக்கியுள்ளதாம். பி.ஜே.பி-க்கு எதிராகவே தம்பிதுரை தொடர்ந்து பேசிவந்தாலும், தற்போது அதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.’’

‘‘முதல்வர் பதவிக்கு ஆரம்பத்தில் காய் நகர்த்தினார். அதற்கு பி.ஜே.பி ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. அந்தக் கோபமாக இருக்குமோ?’’

‘‘இருக்கலாம். அதேசமயம், தம்பிதுரை மட்டு மல்லாது, பெரும்பாலான எம்.பி-க்களுமே பி.ஜே.பி எதிர்ப்பு மனநிலையில்தான் உள்ளனர். ‘பி.ஜே.பி கூட்டணி வேண்டாம். தொடர்ந்து நம்மை அவர்கள் பொம்மையாக வைத்திருக்கத்தான் பார்க்கிறார்கள்’ என்று எடப்பாடியிடமே வெடித்து விட்டார்களாம் சில எம்.பி-க்கள்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘டிஃபென்ஸ் காரிடார் அடிக்கல் நாட்டு விழாவுக்காக திருச்சிக்கு வந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொகுதியின் எம்.பி-யான குமார், திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் அழையா விருந்தாளியாகப் பங்கேற்றனர். இருவருமே மேடையேறுவதற்கான வாய்ப்பையும் கேட்டுத்தான் பெறவேண்டியிருந்தது. எம்.பி-யான குமார் பேசியபோது, ‘திருச்சி விமானநிலைய விரிவாக்கத் துக்குத் தமிழக அரசு இடம் கொடுத்துவிட்டது. ஆனால், ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை இதுவரை வழங்கவே இல்லை’ என்று பேசியுள்ளார். பிறகு பேசிய நிர்மலா சீதாராமன், ‘இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எந்தக் கோப்பும் வரவில்லை’ என்று சொல்ல, உடனே மைக் பிடித்த அமைச்சர் நடராஜன், ‘நீங்கள் முதலில் கோப்புகளைப் பார்த்துவி ட்டு வந்து பேசுங்கள். எல்லா கோப்புகளும் அனுப்பப்பட்டு விட்டன. ராணுவத்தில் கையகப்படுத்தும் இடத்துக்கு மாற்று இடங்களைத் தர தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேடையில் வைத்துக்கொண்டே தன்னை நோகடித்து விட்டார்களே என்று நிர்மலா ‘அப்செட்’டாகி விட்டாராம்.’’
‘‘அ.தி.மு.க தரப்பிலும் கொஞ்சம் வீரம் காட்டத்தான் செய்கிறார்கள்.”

‘‘நிர்மலா மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கடுப்புக் காட்டப்படுகிறது. முன்பு டெல்லியில் தன்னைச் சந்திக்க மறுத்து, வாசலில் நிற்கவைத்து அனுப்பினாரே. ‘ஒரு கட்சியின் தலைவர் அளவுக்கு உயர்வான பதவியில் உள்ள என்னை அவமானப்படுத்திவிட்டு, இப்போது கூட்டணிக்கு மட்டும் வரிந்துகட்டிக்கொண்டுவருகிறார்களா என்று கொந்தளித்திருக்கிறார் பன்னீர்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க