மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள் | MDMK and others planned to black flag protest against Modi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

பிரதமர் மோடியின் மதுரை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பி.ஜே.பி தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்துக் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்துவதற்கு ம.தி.மு.க., மே பதினேழு இயக்கம், பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட இயக்கங்கள் தயாராகிவருகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள திருவிடந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சியைத் திறந்துவைக்க பிரதமர் மோடி வந்தார். அப்போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்புக்கொடிப் போராட்டம், டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்டு ஆனது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவிருக்கிறார். அவருக்கு இந்த முறையும் கறுப்புக்கொடி காட்டப்போவதாக சில இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு, பி.ஜே.பி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“எய்ம்ஸ் போன்ற நல்ல திட்டங்களை விரும்பாத நபர்கள் மட்டுமே கறுப்புக்கொடி பற்றி பேசுவார்கள். கறுப்புக்கொடி காண்பித்தால், எங்களிடம் காவிக்கொடி இருக்கிறது. யாருக்காவது தைரியம் இருந்தால், மோடி தமிழகத்துக்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டட்டும்” என்று சவால் விட்டுள்ளார், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, “தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பிரதமர் வருகையின்போது கறுப்புக்கொடி காட்டுவார்கள்” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.