“இது ஒன்றும் திடீர் முடிவு அல்ல!” - சி.பி.எம் தலைவர் டி.கே.ரங்கராஜன் அதிரடி | CPI (Marxist) leader T.K. Rangarajan ‎interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

“இது ஒன்றும் திடீர் முடிவு அல்ல!” - சி.பி.எம் தலைவர் டி.கே.ரங்கராஜன் அதிரடி

முற்பட்ட சமூக ஏழைகளுக்கு இடஒதுக்கீடு ஆதரவு

‘முற்பட்ட சமூகத்தினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இந்த இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்களித்தது. உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இயங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, தமிழக அரசியல் களத்தில் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘சமுக நீதியை நிலைநாட்டும் இடஒதுக்கீட்டுத் தத்துவத்தை, பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பிரித்துப்பார்ப்பது சரியா?’’

‘‘இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. அதுவும்கூட பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்ற நிபந்தனையுடனே கொடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு, பிற்காலத்தில் வந்தது. அன்றைய காலக்கட்டம் முதலே, ‘முற்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்’ என்பதுதான், இடதுசாரிகளின் கருத்தாக இருந்துவருகிறது. நாங்கள் எப்போதும் இதில் தெளிவாக இருக்கிறோம். எனவே, இந்த முடிவைத் திடீரென நாங்கள் எடுக்கவில்லை.’’