கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா? | Kanji Thotti for Sivakasi Fireworks workers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?

பட்டினியில் பட்டாசுத் தொழிலாளர்கள்... சிவகாசியில் திறக்கப்பட்ட கஞ்சித்தொட்டிகள்!

சிவகாசியில் ஒட்டுமொத்தப் பட்டாசு ஆலைகளும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுக் கிடக்கின்றன.  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன. இதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டிருக்கி ன்றன. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்களோ கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

சிவகாசியில் இயங்கிவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுமார் எட்டு லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக விளங்குகின்றன. இந்த நிலையில், ‘பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, பசுமைப் பட்டாசுகளையே உற்பத்தி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல், பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த அன்றாட கூலிகளான லட்சக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். அவர்களின் அன்றாட  பிழைப்பே கேள்விக்குறியாகிவிட்டது. பலர் திருப்பூருக்கும் வெளி மாநிலங்களுக்கும் கூலி வேலை தேடிச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். 

இன்னொரு பக்கம், பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று போராட்டங்கள் தொடர்கின்றன. டிசம்பர் 21-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் திரண்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் இனாம் ரெட்டியபட்டி, ஆமத்தூர், கன்னிசேரி புத்தூர், ஏழாயிரம்பண்ணை உட்பட பல இடங்களில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன.