“பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸுக்கு வலிமை போதவில்லை!” - தெறிக்கவிடும் திருமா... | VCK Leader Thol Thirumavalavan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/05/2019)

“பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸுக்கு வலிமை போதவில்லை!” - தெறிக்கவிடும் திருமா...

“தூங்கி நாற்பத்தெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனால், என்னுடைய வெற்றிக்கு பிரயாசைப் பட்டு ஒரு பெருங்கூட்டமும் தூங்காமல் காத்திருந்தார்கள் எனத் தெரியவந்த கணமே என்னிடமிருந்த சோர்வு அகன்று, மேலும் வலிமைகொண்டவனாக உங்கள் முன்னே உரையாடத் தொடங்குகிறேன்” என சிரிக்கிறார் தொல்.திருமாவளவன் எம்.பி. தேர்தல் முடிவு அறிவிக்கும்வரை பல சோதனைகளைச் சந்தித்து, ஒருவழியாக வெற்றியும் கண்டுவிட்ட அவர் மக்கள் ஆரவாரத்துக்கு இடையே நீந்தி வந்து நம்முடன் உரையாடத் தொடங்கினார்.

“நீண்ட காத்திருப்புக்கும் தத்தளிப்புக்கும் பின்பு சாத்தியமாகியிருக்கும் இந்த வெற்றி குறித்து எப்படி உணர்கிறீர்கள்?”

“நீரோட்டப் போக்கில் கரையேறுவதைவிட எதிர்நீச்சல் அடித்துக் கரையேறியது பெருமை அளிக்கிறது, மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட இந்த மூவாயிரம் ஓட்டுகளில் கிடைத்த வெற்றி, மிகப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது; அந்த மக்கள் எவ்வளவு மதிப்பானவர்கள் என்பதை இந்த வெற்றி மிக நெருக்கமாக உணர்த்துகிறது.

இதுவரை நான் வெற்றி தோல்வியைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், இந்த முறை மூவாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தருணத்தில், வாக்களித்த ஒவ்வொருவரையும் நினைத்து நெகிழ்ந்து போனேன். கண் கலங்கினேன். அந்த மக்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று நினைக்கும்போது எனக்குள் விம்மியது. இப்போதும் அதை நினைக்கும்போது சிலிர்க்கிறது. குறிப்பாக, காட்டுமன்னார்கோயில் தொகுதி மக்கள். அவர்கள் 31 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அளித்து, பெரிய அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். பொன்பரப்பியில் இதற்காக மக்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மோடியை வீழ்த்த வேண்டும் என்கிற அதீத வேட்கையுடன் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். அறத்தின் மீது நம்பிக்கையுள்ள இந்துக்கள் எனக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனவே வாக்களித்த ஐந்து லட்சம் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.”