அன்று 100 கோடி தொழிலதிபர்... இன்று கால் டாக்ஸி டிரைவர்! | Billionaire Navamani Vedamanickam now Taxi Driver - What happened? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/06/2019)

அன்று 100 கோடி தொழிலதிபர்... இன்று கால் டாக்ஸி டிரைவர்!

செல்லூர் ராஜுவால் ஏமாற்றப்பட்டாரா?

மெரிக்காவில் சம்பாதித்த பலகோடி ரூபாயை தமிழ்நாட்டில் நல்ல விஷயங்களுக்காகச் செலவிட வருவார் சிவாஜி. லஞ்சம், ஊழல், மிரட்டல், அரசியல் எல்லாம் அவரை நாலா பக்கமும் நோகடிக்கும். ஒன்றையும் செய்யவிடாமல் கையைக் கட்டிப் போடும். சொத்து, சுகம் எல்லாவற்றையும் இழந்து ஒற்றை ரூபாயுடன் நடுத்தெருவுக்கு வருவார் சிவாஜி. இது ‘சிவாஜி’ படத்துக்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை. நிஜத்தில் நவமணி வேதமாணிக்கத்துக்கு நடந்ததும் கிட்டத்தட்ட இதேதான். சுமார் 100 கோடி ரூபாயுடன் சென்னை வந்திறங்கிய அவர், அரசியல் ஆதிக்கச் சக்திகளின் கைகளில் சிக்கி, எல்லாவற்றையும் இழந்து இப்போது சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுகிறார். என்னதான் நடந்தது? அவர் சொல்லக் கேட்போம்.

‘‘நெல்லை மாவட்டம், பணகுடி என் பூர்வீகம். நான் மதுரையில் படித்து முடித்துவிட்டு, 1989-ல் அமெரிக்கா சென்று கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினேன். 150 அமெரிக்கப் பொறியாளர்களுக்கு வேலைகொடுத்த என் நிறுவனம், அமெரிக்காவின் டாப்- 25 நிறுவனங்களின் வரிசையில் 19-வது இடத்தில் இருந்தது. அதில் நான் மட்டுமே இந்தியன். அமெரிக்காவில் பணியாற்றிய போது ‘நம் சொந்த மண்ணின் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்கிற உந்துதல் ஏற்பட்டது. அதனால், 2007-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து பல கோடி ரூபாய் முதலீட்டில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி னேன். அதில் 125 தமிழ் மென்பொறியாளர்களுக்கு வேலை கொடுத்தேன்.