“இளவரசன் மரணம் தற்கொலையே!” - சர்ச்சையைக் கிளப்பிய ஆணையத்தின் அறிக்கை... | Justice Singaravelu Commission Findings On Elavarasan only Suicide - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

“இளவரசன் மரணம் தற்கொலையே!” - சர்ச்சையைக் கிளப்பிய ஆணையத்தின் அறிக்கை...

கொலை, தற்கொலை என்று பல்வேறு அவதாரம் எடுத்தது தர்மபுரி இளவரசன் காதல் விவகாரம். அவருடைய மர்ம மரணத்தை விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கைதான் இளவரசனின் மரணத்துக்கு, ‘தற்கொலை’ என முற்றுப்புள்ளி வைத்து முடித்துவைத்திருக்கிறது. சமீபத்தில் அந்த அறிக்கையின் தகவல்கள் வெளியே கசியவே... அந்த விவரங்கள் இப்போது பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியிருக்கின்றன.

தர்மபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். பக்கத்துக் கிராமமான செல்லன்கொட்டாயைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார். இருவரும் 2012 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டனர். பெண்ணின் தரப்பில் கிராமமே கொந்தளித்தது. தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து வன்முறை வெடித்தது. பெண்ணின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். தந்தையின் தற்கொலை, சாதிய மோதல்கள், தாயாரின் மனு என அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குப் பின்பு 2013 ஜூன் 4-ம் தேதி இளவரசனைவிட்டுப் பிரிந்துவந்த அவர் மனைவி, தன் தாயைச் சந்தித்தார். இதையடுத்து, தன் மனைவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்தார் இளவரசன். தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண், தன் தாயுடன் செல்வதாகத் தெரிவித்தார்.