கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

கழுகார் பதில்கள்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம். 
என்ன கழுகாரே, மின்னஞ்சல் கடிதத்துக்கு மட்டும்தான் முன்னுரிமையா... மை கடிதத்துக்கு இல்லையா?

மின்னஞ்சலோ... ‘பென்’னஞ்சலோ... அது உங்கள் உரிமை; எதற்குமே கழுகார் தருவதில்லை பின்னுரிமை; எல்லாவற்றுக்கும் பதில் சொல்லவேண்டியது கழுகாரின் கடமை. ஆனால், அனைவரும் காக்கவேண்டும் கொஞ்சம் பொறுமை. அதுதான் தமிழனுக்கே பெருமை!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
‘பி.ஜே.பி-யை விமர்சிக்கவில்லை. தமிழக உரிமைகளுக்காகத்தான் நான் பேசினேன்’ என்று தம்பிதுரை பல்டியடித்துவிட்டாரே?


தன்னையே ‘தமிழகம்’ என்று உணர்வதன் மூலமாக தம்பிதுரை எங்கேயோ ‘உயர்ந்து’விட்டார். கூட்டணி முடிந்த பிறகு திருப்பதிக்குப் போனவர், லட்டு தருவார் என்று பார்த்தால், அல்வா அல்லவா கொடுக்கிறார்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

தண்ணீர்ப் பிரச்னையை இதுவரை எந்தக் கட்சியும் தீர்க்கவில்லை. அப்படிப் பார்த்தால், ‘நோட்டா’வுக்குத்தானே தன் ரசிகர்களை ரஜினி ஓட்டுப்போடச் சொல்லவேண்டும்?


‘மூளையைக் கேட்டு முடிவெடுப்பதில்லை. மனதைக் கேட்டு முடிவெடுப்பவன் நான்’ என்று சொல்பவர் ரஜினி. இப்போது எதைக் கேட்டு முடிவெடுத்தார் என்று தெரிந்தால்தான், உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லமுடியும்.

@அ.மனோகரன், நன்மங்கலம்.
இறைவனுக்குப் பூஜை செ‌ய்துகொண்டிருக்கும்போதே ஒரு பக்தன் இறந்துபோகிறான். இறைவனுக்கே இரக்கம் இல்லையா?


பாசப்பந்தங்களால் கட்டுண்டு கிடப்பதால்தான் மனிதர்களாகிய நாம் மரணத்தைப் பெரிதாகப் பார்க்கிறோம். ஈ, எறும்பு, கொசு, நாய், யானை என்று நம்மைச் சுற்றியிருக்கும் எத்தனையோ ஜீவராசிகள் தினம் தினம் நம் கண்முன்பாக மரணித்துக்கொண்டுதானே இருக்கின்றன. நம்மால் கொல்லவும்படுகின்றனவே. அவையெல்லாம் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருப்பதில்லையே! ஆஸ்தி, அந்தஸ்து, கௌரவத்துக்காக வாழ்பவையல்ல, அவை. இயற்கையின் நியதிப்படி மட்டுமே வாழ்பவை. இதில் இறைவனையெல்லாம் ஏன் இழுக்கிறீர்கள்!

@ஹெச்.ரஹீம், சாந்தி நகர், மதுரை-18.

2014 மக்களவைத் தேர்தலில் ‘மோடியா... லேடியா’ என்று சொல்லி வெற்றிபெற்ற அ.தி.மு.க., தற்போது கூட்டணிபோட ஆரம்பித்துவிட்டதே!


அது, ‘ஜெ’ ப்ளஸ் அ.தி.மு.க. இது, ‘ஜெ’ மைனஸ் அ.தி.மு.க.

@அமுதன் பாலா, முத்தியால்பேட்டை, புதுச்சேரி-3.
தமிழ்த் தேசியக் கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?


நாம் தமிழர் கட்சி போல ஏகப்பட்ட கட்சிகள் தமிழ்த்தேசியம் பேசுகின்றன. இப்போதுகூட, திரைப்பட இயக்குநர் கவுதமன் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஆனால், திராவிட அரசியலுக்கு முன்பாக, தமிழ்த்தேசியம் அத்தனை தூரம் எடுபடாமல்தான் இருக்கிறது. அதிலும், உலகமயமாக்கலுக்குப் பிறகு சாதி, மதம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் இனி ஆட்சிகளைக் கட்டமைப்பது சாத்தியமல்ல என்றுதான் தோன்றுகிறது. பி.ஜே.பி., மதத்தை முன்னிறுத்தி வெற்றிபெற்றதாகப் பார்க்கப் படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. காங்கிரஸின் தவறுகள்தான், பி.ஜே.பி-யின் வெற்றி. பி.ஜே.பி-யின் தவறுகள்தான் காங்கிரஸின் வெற்றி.

ஒருவேளை தமிழர்கள் அத்தனை பேரும், தமிழ்நாட்டுக்குள் மட்டுமே வாழ்ந்தார்கள் என்றால் சாத்தியமாகலாம்.

@பி.எஸ்.ஜெய்லானி, கடையநல்லூர்.

வெட்கம், மானம், சூடு, சொரணை அப்படின்னா என்னங்க?


குழாயடிச் சண்டை நடக்குது. வேடிக்கை பார்த்தோமா... போனோமானு இல்லாம கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு!

@மு.க.அழகிரி, ஒதியடிக்காடு.
அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி... சாரி, குதிரைபேரம், எத்தனை கோடிகளில் முடிந்தது?


உண்மையிலேயே உங்களுடைய பெயர் மு.க.அழகிரிதானா?

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என்கிறாரே கமல். இது விஷப்பரீட்சையா... தன்னம்பிக்கையா?


முதலில் ‘தன்னம்பிக்கை’யாக இருந்தது. மறுநாளே ‘விஷப்பரீட்சை’யாக மாறிவிட்டது. ‘ஒரே கருத்துடையக் கட்சிகளுடன் கூட்டணி பற்றிப் பரிசீலிக்கப்படும்’ என்று மறுநாளே கூறிவிட்டாரே கமல்.

வி.விமலநாதன், கும்பகோணம்.

‘கூட்டணிக்குக் கொள்கை தேவையில்லை’ என்று கூறும் அரசியல் கட்சிகள், மக்களிடம் வாக்குகளைக் கேட்க எதை முன்வைப்பார்கள்?


வாக்குக் கேட்டுவரும் அரசியல்வாதிகளிடம் பெரும்பாலான மக்கள் கொள்கைகளையா எதிர்பார்க்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close