கழுகார் பதில்கள்! - காடுகளின் எதிரி உல்லாச விடுதிகளே... ஓலைக்குடிசைகள் அல்ல! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

கழுகார் பதில்கள்! - காடுகளின் எதிரி உல்லாச விடுதிகளே... ஓலைக்குடிசைகள் அல்ல!

@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.
ரஜினியின் அடுத்த படம் என்ன? (வேறென்ன கேட்க!)


‘நாற்காலி’க்குச் சண்டைபோடும்
நாடு நம் பாரத நாடு.
நீ போட்டு நானும் போட்டு
என்னாச்சு நம்ம ஓட்டு
கூத்தாடி பொழப்பா போச்சு
ஜனங்க பாடு... இப்ப ததிங்கிணத்தோம்’
என்று பாடியவர், இந்த ஸ்டைலில் ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி! (வேறென்ன சொல்ல!)

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
தைலாபுரம் விருந்துக்கு பி.ஜே.பி-யை அழைக்கவில்லையே?


ஆடு பகை, குட்டி உறவு!      

@பா.கவின், சென்னை - 21.
கழுகாரின் பார்வையில் எல்.கே.ஜி திரைப்படம்?


க்ளைமாக்ஸ் தவிர, மற்ற அனைத்தும் சமகால அரசியல்வாதி ஒருவரின் அபரிமிதமான வளர்ச்சியை நேருக்கு நேராகக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

@ஞானப்பிரகாஷ், தொம்பக்குளம்.
மோடியின் வசீகரம், அமித் ஷாவின் அற்புதமான உத்திகள், ஆர்.எஸ்.எஸ் நெட்வொர்க், நிதித் திட்டங்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான சர்ஜிக்கல் அட்டாக் இதை எல்லாம் மீறி காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறுமா?


ரஃபேல் விமான பேரம், ஜி.எஸ்.டி தாக்குதல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரியங்காவின் வரவு, கூட்டணிக் கட்சிகள் இதெல்லாம்கூட எடுபட்டால், வாய்ப்புகள் இருக்கின்றனதானே!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
‘லோக்ஆயுக்தா’ அமைப்பை ஆறு வாரத்துக்குள் செயல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதே?


நீதிமன்றங்கள் ஆணையிட்டாலும், யாரும் இங்கே கவலைப்படுவதில்லை. சமீபத்தில்கூட ‘நீதிமன்றங்களின் உத்தரவை அரசும் அதிகாரிகளும் நிறைவேற்றுவதே இல்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை பொங்கக் கூறியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

@காந்திலெனின், திருச்சி.
வனப்பாதுகாப்புச் சட்டத்தைக் காட்டி, பழங்குடி மக்களைக் காடுகளை விட்டு வெளியேறச் சொல்கிறதே உச்ச நீதிமன்றம்?


சுற்றுலா என்கிற பெயரில் காடுகளை ஆக்கிரமித்திருக்கும் உல்லாச விடுதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களின் படாடோப பங்களாக்களும்தான் காடுகளின் முதல் எதிரியே தவிர, பழங்குடிகளின் ஓலைவேய்ந்த குடிசைகள் அல்ல. தற்போது, மத்திய அரசின் பதில் மனுவை அடுத்து, தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இது தற்காலிகத் தீர்வே தவிர, நிரந்தரமானதல்ல. உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், உறுதியான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

மணிமாறன், தண்டையார்பேட்டை, சென்னை-81.
சமீபகாலமாக தமிழக அமைச்சர்களின் பேச்சுகளில் ஓர் ஆணவத் தொனி இருப்பதைக் கவனித்தீரா. 1991 காலகட்டத்தில் இப்படியொரு நிலை இருந்தாக ஞாபகம். என்ன தைரியத்தில் இப்படிப் பேசுகிறார்கள்?


‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்கிற தைரியத்தில்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close