எடப்பாடி அரசு நன்மை செய்யாது! - குமுறும் ஜாக்டோ-ஜியோ! | EPS government will not benefit us - Says JACTO-GEO members - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

எடப்பாடி அரசு நன்மை செய்யாது! - குமுறும் ஜாக்டோ-ஜியோ!

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஜனவரியில் நடத்திய போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும், அதன் எதிரொலி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்குப் பெரும் குடைச்சலைக் கொடுக்கும் என்று தெரிகிறது. அந்த அளவுக்கு அரசுமீது ஆத்திரத்தில் உள்ளனர் அரசு ஊழியர்கள்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரியும், புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்துவரும் வழக்கில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த 4-ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில்  விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜாக்டோ - ஜியோ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், லஜபதிராய், சங்கரன் ஆகியோரும், அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனும் கடுமையாக வாதாடினார்கள்.

ஜாக்டோ - ஜியோ தரப்பில், “கோரிக்கைகளை முன்வைத்து 2017-ம் ஆண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அப்போது தலைமைச்செயலாளர் ஆஜராகி, இடைக்கால உத்தரவின் பேரில் உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதனால்தான் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் கேட்டுக்கொண்டதால் வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கினர். எனினும் ஆசிரியர், அரசு ஊழியர்களை இடைநீக்கம் செய்தும், இடமாறுதல் செய்தும் அரசு பழிவாங்குகிறது. அதுபோல், 7-வது சம்பளக் கமிஷனில் உள்ள முரண்பாடுகள் இன்றுவரைக் களையப்படவில்லை. தலைமைச்செயலாளர், நிதித்துறைச் செயலாளர் போன்றவர்கள் நிலுவைத் தொகையை முழுவதுமாகப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், ஊழியர்களுக்கு மட்டும் ஒன்பது மாதங்கள் கடந்த பின்னும் நிலுவைத் தொகையை வழங்க மறுக்கின்றனர். பல மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி மாநில அரசு இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தில், ஓய்வுபெற்றவர்களுக்கு இன்றுவரை ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட வில்லை. புதிய பென்ஷன் திட்டத்தில் பிடிக்கப்படும் பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. பங்களிப்புத் தொகையை அரசு செலுத்துவதில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும்” என்று வாதிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close