எலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’ | Pollachi sexual case - Pollachi Jayaraman Intimidate Edappaadi Palaniswamy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

எலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’

முற்றிலுமாக மூடிமறைக்க நினைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரம் பற்றியெரியத் தொடங்கிவிட்டது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ போல கைபேசியிலும் கணினியிலும் பரவிய இந்த விவகாரம், தமிழகத்தையே கொதிப்படைய வைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி, கமல்ஹாசன் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் பேட்டி, அறிக்கை, மனு என்று பொங்கிவிட்டனர். பொள்ளாச்சிக்கே சென்று போராட்டம் நடத்தி, பொதுமக்கள் மத்தியில் ஆவேசம் காட்டினார், கனிமொழி. உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிடக் கூடாது என்று மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் பற்றி விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘தேவைப்பட்டால், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம்’ என்று கூறியுள்ளார், மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி. ‘நிர்பயா விவகாரத்தைப் பெரிதுபடுத்திய தேசிய ஊடகங்கள், பொள்ளாச்சி விவகாரத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது’ என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளே வேதனைப்படும் அளவுக்கு, இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குற்றவாளிகளைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளியதும், ஓரிரு நாள்களில் எல்லாம் அடங்கிப்போகும் என்று காவல்துறை நினைத்தது, நிறைவேறவில்லை.
அரசியல் மற்றும் சமூகரீதியான எதிர்ப்புகள் காரணமாக, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றிய தமிழக அரசு, சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரைத்துவிட்டது. வழக்கை சி.பி.ஐ ஏற்குமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதற்கிடையில், ஐ.ஜி ஸ்ரீதர் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தங்களது விசாரணையை பொள்ளாச்சியில் தொடங்கிவிட்டனர். அதற்கு முந்தைய நாள் இரவிலேயே ‘மஃப்டி’ உடையில் இருந்த போலீஸார் சிலர், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சின்னப்பம்பாளையம் மற்றும் மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசுவின் வீடுகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்கள் உள்ளூர் போலீஸா, சி.பி.சி.ஐ.டி போலீஸா, கதவை உடைத்துச் சென்ற இவர்கள் என்னென்ன ஆதாரங்களை அங்கிருந்து எடுத்துச்சென்றனர் என எந்த விவரமும் தெரியவில்லை.

[X] Close

[X] Close