பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா? | Discuss about Pollachi Sexual assault issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

டி.எல்.சஞ்சீவிகுமார்

சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கு கேட்ட நிஜக்கதைகள் பலநாள்கள் தூக்கத்தைப் பறித்தன. எந்தச் செயலை செய்தாலும்... என்ன வேலையில் மூழ்கினாலும் மனதில் ஒரு மூலையில் அந்தக் கதைமாந்தர்களின் துயரங்கள், விடாமல் அரற்றிக்கொண்டே இருந்தன. கதைகளின் தன்மை அப்படி.

முழுமையாக இங்கு சொல்லவிரும்பவில்லை. ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்... “கையில் சூலாயுதங்களுடனும், பெட்ரோல் கேனுடனும் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், எங்கள் முன்னால், அவர்களின் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்துவிட்டு, அம்மணமாக நின்றது. பின்பு எங்களையும் அதேபோல செய்யச்சொல்லி அனைவரையும் பலாத்காரம் செய்தது. அந்தச் சம்பவத்தின்போது எங்கள் பாட்டி வலி தாங்காமல் இறந்துபோனார்” என்றார்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள். இப்போது அவர்கள் பெண்கள் அமைப்பு ஒன்றில் தீவிரமாக இயங்குபவர்கள். இன்னொரு சமூகச் செயற்பாட்டாளரைச் சந்தித்தபோது, “வீட்டில் வயதான தாய், தந்தையரின் முன்னிலையில் நிறுத்தி, அவர்களைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, குழந்தைகளையும் சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பின்பு பெற்றோரின் முன்னாலேயே இரும்புத்தடியால் அந்தச் சிறுமிகளை மண்டையில் ஓங்கி அடித்துக்கொன்றிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் தலையில் சுத்தியலால் அடித்து ரத்தம் ஒழுக... அவர் உயிர் பிரியும் தருணத்தில் - அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்து, ஒருவன் அந்தப் பெண்ணை வன்புணர்ந்திருக்கிறான். இன்னொருவன் அந்தப் பெண் இறந்தப் பின்பும் புணர்ந்திருக்கிறான்” என்றார். அப்போது கேட்டபோதும்... இப்போது எழுதும்போதும் கைகள் நடுங்குகின்றன. அதன் பிறகு அதேபோன்றதொரு பதற்றத்தை... நடுக்கத்தை மீண்டுமொருமுறை இப்போது நெஞ்சில் விதைத்திருக்கிறது ‘விட்ருங்க அண்ணா’ என்று அலறும் அந்தப் பெண்ணின் குரல்.