சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை! | Katchatheevu anthoniyar temple festival - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை!

கச்சத்தீவு திருவிழா சோகங்கள்...

மீபத்தில் சம்பிரதாயம்போல நடந்து முடிந்திருக்கிறது கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா. சிங்கள மக்களின் ஆதிக்கம், சிங்கள மொழியில் வழிபாட்டுப் பாடல்கள் என்று அந்தோணியார் திருவிழாவில் பெரும்பாலும் சிங்கள ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. தவிர, விழாவில் கலந்துகொண்ட மீனவர்களிடம் பேசியபோது, இலங்கை தமிழ் இளைஞர்களைப் போதைக்கு அடிமைகளாக்கி அவர்களை முடக்க, இலங்கை அரசு திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின்படி 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. கச்சத்தீவில் நடந்துவரும் அந்தோணியார் திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் சென்றுவந்தனர். ஒருகட்டத்தில் புலிகள் இயக்க நடவடிக்கைகள், தீவிரமடைந்ததால் சிறிது காலம் கச்சத்தீவு திருவிழா நடத்தப்படவில்லை. இலங்கை இறுதிப் போருக்குப் பின்னர் கடந்த பத்து ஆண்டுகளாக கச்சத்தீவு திருவிழா நடந்து வருகிறது. நெடுந்தீவு கிறிஸ்துவப் பங்கின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் இருந்தாலும், புலிகள் இயக்கத்தின் முடக்கத்துக்குப் பின்பு கச்சத்தீவு, முழுமையாக இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்திய மீனவர் சீனிகுப்பன் உருவாக்கிய பழைமையான அந்தோணியார் ஆலயத்தின் அருகிலேயே புதிய ஆலயத்தைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கைக் கடற்படையினர் கட்டினர்.