நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’? | BJP and Congress Websites Hacked issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கிறதா ‘சோஷியல் இன்ஜினீரிங்’?

ளும் பி.ஜே.பி கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம், மார்ச் 5-ம் தேதி மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. கடைசிவரை அதை மீட்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன்தினம் படாதபாடுபட்டு புதிய இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது பி.ஜே.பி. இதேபோல் மார்ச் 15-ம் தேதி குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் இணையதளமும் முடக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் இரண்டு மிகப்பெரிய கட்சிகளின் அதிகாரபூர்வத் தளங்களையே முடக்கியிருக்கிறார்கள் என்றால் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை ‘சைபர் க்ரைம்’ நடக்கக்கூடுமோ என்ற கவலை, கட்சிகளைத் தொற்றிக்கொண்டுள்ளது.

அடுத்த வருத்தம்... தேர்தல் பரப்புரை பற்றியது. ஒரு கட்சியின் வெற்றி, பரப்புரையில் மட்டும் கிடைப்பதில்லை. பரப்புரையை யாருக்கு, எப்படிப் பரப்புகிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அந்தக் காலம்போல, தாரை தப்பட்டையுடன் ஊர்வலம், போஸ்டர், சுவர் விளம்பரம் என்று ஊரே அல்லோகலப்படும் சூழல் இப்போது இல்லை. எல்லாப் பரப்புரைகளும் உள்ளங்கைக்குள் உடனுக்குடன் வந்து விடுகின்றன. உதாரணத்துக்கு அம்மா கட்சி, அப்பா கட்சி என இரண்டு கட்சிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இதில் அம்மா கட்சி செய்த சில தவறுகள், நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகிற தளத்தில் தேர்தல் நடக்கிற பத்து நாள்களுக்கு முன்பு செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும் உங்கள் பார்வைக்கு வந்துகொண்டேயிருக்கும். எந்த இணையப் பக்கத்தைத் திறந்தாலும் அவை துரத்தும். அதுவரையிலும் நடுநிலையுடன் இருந்த உங்கள் மனது, அப்பாவின் கட்சிக்கே ஆதரவு என்ற முடிவை எடுக்கும். இது அப்பா கட்சியின் வேலைதான். இந்த அவசர யுகத்தில் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயும் அளவுக்கு, பொறுமையோ, அக்கறையோ யாருக்குமில்லை. அப்படி இருக்கையில் இப்படி வந்து விழும் செய்திகள், நம்மை ஒரு முடிவுக்குள் தள்ளுகின்றன. தேர்தல் காலத்தில் பரப்பப்படுகிற பல வதந்திகள், தேர்தலில் ஒருவரின் வெற்றிக்கோ, தோல்விக்கோ காரணமாகிவிடுகின்றன. இதுதான் ‘சோஷியல் இன்ஜினீரிங்’. அதாவது நாட்டின், நாட்டு மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்துள்ளது ‘சோஷியல் இன்ஜினீரிங்’!