வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர் | Sriperumbudur Lok Sabha constituency winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

வெற்றிக்கு ‘எனர்ஜி பூஸ்டர்’ அவசியம் - விறுவிறு வி.ஐ.பி - ஸ்ரீபெரும்புதூர்

ஓவியம்: அரஸ்

தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுவதால்... அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி. ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது, இத்தொகுதி. நிசான், ஹூண்டாய், ராயல் என்ஃபீல்டு, செயின்ட்கோபெயின் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் பசையான தொகுதியும்கூட.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

தி.மு.க முதன்மைச் செயலாளரான டி.ஆர்.பாலு, 1996, 1998, 1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்றவர். 2009-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பில்... தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்த தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வந்துவிட்டன. அதேபோல ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சில பகுதிகள், ஏற்கெனவே தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தவை. அதனால்தான், 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றார், டி.ஆர்.பாலு.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் டி.ஆர்.பாலு ஒரு ஸ்பிரிட் ஆலையைத் தொடங்கியபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஸ்பிரிட் ஆலை எதிர்ப்பாளர்களைப் பின்னால் இருந்து இயக்கி வந்தவர், மாவட்ட தி.மு.க செயலாளர் பழனிமாணிக்கம்தான் என்று தகவல்கள் கசிய... பழனிமாணிக்கத்தை வீழ்த்தவேண்டும் என்பதற்காகக் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார் டி.ஆர்.பாலு. ஆனால், அங்கு பழனிமாணிக்கத்தின் கை ஓங்கியிருந்ததால், டி.ஆர்.பாலுவால் வெற்றி பெற முடியவில்லை. அதனால்தான், மீண்டும் தனக்கு நன்கு பரிச்சயமான ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கே வந்துவிட்டார்.