வளர்ச்சி கோஷம் தொகுதியை வசப்படுத்துமா? - விறுவிறு வி.ஐ.பி - கன்னியாகுமரி | Kanyakumari Lok Sabha constituency winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

வளர்ச்சி கோஷம் தொகுதியை வசப்படுத்துமா? - விறுவிறு வி.ஐ.பி - கன்னியாகுமரி

ஓவியங்கள்: அரஸ்

ரண்டுமுறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் தொகுதி என்பதுடன், தமிழக பி.ஜே.பி-யினர் உறுதியாக நம்பும் தொகுதி என்பதால், கன்னியாகுமரி தொகுதிக்குத் தனிக்கவனம் கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, கன்னியாகுமரி நடாளுமன்றத்தொகுதி.

தொகுதி சீரமைப்புக்கு முன் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோது 1991, 1996, 1998-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றார். பின்பு, 2004-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கன்னியாகுமரி தொகுதியாகச் சீரமைக்கப்பட்டபிறகு, 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கடந்த 2011-ம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிலும் தோல்வியடைந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். தற்போது எட்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் களமிறங்கியிருக்கிறார், பொன்.ராதாகிருஷ்ணன்.