”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!” | Edappadi Palaniswamy campaign strategy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

”வீரம் குன்றா வேலுநாச்சிகளே... தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே!”

தெறிக்கவிடும் எடப்பாடி வியூகம்...

‘என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே’ - ஜெயலலிதாவின் இந்த வார்த்தைகளை தமிழக மக்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தல்வரை பிரசாரத்தில் ஜெயலலிதா அடிக்கடி உச்சரித்த வார்த்தைகள் இவை. அந்த ஜெயலலிதாவின் ஆட்சியை இப்போது கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அதையே பின்பற்றத்தொடங்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் முன்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “40 தொகுதிகளிலும் கழகம் வெற்றியைக் குவிக்க எனதருமை வீரம் குன்றா வேலுநாச்சிகளே, தீரம்மிக்க தில்லையாடி வள்ளியம்மைகளே, வீரத்திருமகளாம் ஜெயலலிதாவின் பாசறைகளில் பயின்ற எனதருமைச் சகோதரிகளே புறப்படுங்கள். தாய்க்குலத்தைத் தலைநிமிர வாழவைத்த நம் தங்கத்தாரகையின் அ.தி.மு.க அரசுக்கு, எங்கள் தங்கைகளே பலம் என்பதை உலகுக்கு உணர்த்த உடனே களம் இறங்குங்கள்...” என்று பெண்களைக் கவரும் வகையில் தெறிக்கவிட்டிருந்தார் எடப்பாடி. அ.தி.மு.க-வினரிடம் இதுகுறித்துப் பேசினால், “தேர்தல் பிரசாரத்தில் பெண்களை மையப்படுத்தி வியூகம் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார், அண்ணன் எடப்பாடி” என்கிறார்கள்.

“பொதுவாக, ‘எடப்பாடியின் கணக்கு, சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமே...’ என்ற கருத்து பரவலாக உள்ளது. அது உண்மையல்ல. நாங்கள் 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயித்துவிட்டு, தி.மு.க 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவர்கள் சொல்வதை மத்தியில் அமையும் அரசு கேட்கும் நிலை உருவாகும். அது எடப்பாடிக்குத் தெரியாதா? எனவே, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கூடுதல் முக்கியத்துவம் அளித்தாலும், 20 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது வெல்லவேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.