‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்... | J.Deepa support to ADMK for Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

‘வான்டட்’டாக வண்டியில் ஏறிய பேபிம்மா! - குஷியில் எடப்பாடி முகாம்...

ஓவியம்: கார்த்திகேயன்மேடி

“அ.தி.மு.க-வின் வெற்றியைக் கருத்தில்கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கிறோம்” என்று கடைசி நேரத்தில் ‘அதிரடி’யாக அறிவித்து... தாய் கழகத்துக்கு தனது அதிரிபுதிரி ஆதரவை அள்ளிக்கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் பேபிம்மா. இதில், எடப்பாடி முகாம் ஒருசேர அதிர்ச்சியிலும் உற்சாகத்திலும் துள்ளிக்குதிக்காதது ஒன்றுதான் பாக்கி. இதுகுறித்து அ.தி.மு.க தொண்டர்களைக் கேட்டால், ஏனோ தெரியவில்லை, குறுகுறுவென முறைக்கிறார்கள். சரி... என்னதான் நடந்தது, நடக்கிறது?

தன் அத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘தமிழ்நாட்டை, அரவணைக்க நான் இருக்கிறேன்’ என அரசியலில் குதித்தார் ஜெ.தீபா. எதிர்பார்ப்பு எகிறியது. தினமும் பகல் 12 மணிவாக்கில் பால்கனியில் நின்று தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்து, ‘தீவிர’ அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இதில் புளகாங்கிதம் அடைந்த தொண்டர்கள் அன்று முதல் இவரை, ‘பேபிம்மா’ என்றே அன்போடு அழைக்கத்தொடங்கினார்கள். அதன்பின்பு ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யை ஆரம்பித்தது, தம்பியுடன் மல்லுக்கட்டியது, கணவருடன் ‘டூ’விட்டது, டிரைவரை கட்சியிலிருந்து நீக்கியது, திரும்பவும் சேர்த்துக்கொண்டது, மீண்டும் நீக்கி... மீண்டும் சேர்த்து... (ஸ்ஸ்ஸ்... யப்பா... முடியலை) என ‘அதி தீவிரவாத’ அரசியலில் பேபிம்மா இறங்க, மிரண்டுப்போனது தமிழகம்.