“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!” | CPI R.Mutharasan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

இரா.முத்தரசன் நம்பிக்கை

கூட்டணிக் கணக்குகள், தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர் அறிவிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. தலைவர்களின் சூறாவளிப் பிரசாரங்கள் அனலைக் கிளப்புகின்றன. இத்தகைய சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களிடம் நீங்கள் முன்வைக்கும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?’’

‘‘இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதாலும், எங்கள் கட்சி அகில இந்தியக் கட்சி என்பதாலும், இந்திய அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அதில், ‘தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்பது முக்கியமானது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், 31 சதவிகித வாக்குகளைத்தான் பி.ஜே.பி பெற்றது. மீதி 69 சதவிகித மக்கள் பி.ஜே.பி-க்கு எதிராகத்தான் வாக்களித்தனர். இருப்பினும், பி.ஜே.பி-யினால் ஆட்சியமைக்க முடிகிறதென்றால், அது எப்படி ஜனநாயகமாகும்? ஆகவே, இந்த தேர்தல் முறை மாற்றப்பட்டு  விகிதாச்சார முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அடிப்படைக் கோரிக்கை.  இதுதவிர, நீதிமன்ற ஆணையின்படி நதிநீர் இணைப்பு, மதச்சார்பின்மைக் கொள்கை, மாநில சுயாட்சி ஆகியவற்றை அதன் விரிவான பொருளுடன் தெளிவுபடுத்தி, எங்கள் தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்திருக்கிறோம். இதை மக்களுக்கும் உறுதிப்படுத்துவோம் என்கிற உடன்படிக்கையின் பேரில் அவர்களிடம் பிரசாரம் செய்வோம்.’’

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘ராகுல் காந்திதான் பிரதமர் ஆக வரவேண்டும்’ என்கிறார். கூட்டணியில் இருக்கும் உங்கள் தரப்பு என்ன நினைக்கிறது?’’

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்ததை யாரும் எதிர்க்கவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதை நாங்களும் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்ட மாதிரிதான். ஆனால், உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கலந்து பேசி ஒரு முடிவு செய்யலாம் என்று இருக்கிறோம். இதைத்தான் எங்கள் கட்சியின் தேசியச் செயலாளரும் கூறியிருக்கிறார்.’’