“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி | TN BJP senior Leader ILA Ganesan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

“தூத்துக்குடி சம்பவம் எங்கள் வெற்றியைப் பாதிக்காது!” - இல.கணேசன் பேட்டி

‘மீண்டும் மோடி... வேண்டும் மோடி’ என்று அ.தி.மு.க - பி.ஜே.பி தமிழகத் தலைவர்கள் பிரசாரக் களத்தில் இறங்கி விட்டனர். தமிழக பி.ஜே.பி தலைவர்களிலேயே பக்குவமும் முதிர்ச்சியும் கொண்டவர் என்று பெயரெடுத்தவரும், அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை?”

‘‘போட்டியிட்டிருக்கலாம்தான். எனக்கு விருப்பமானது தென்சென்னை தான். ஆனால், எப்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதோ, அப்போதே தென்சென்னை பி.ஜே.பி-க்கு கிடைப்பது அரிது என்று தெரியும். கட்சித் தலைமையும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னைக் கேட்டபோது, ‘தென்சென்னை கிடைத்தால் போட்டியிடுகிறேன், மற்ற தொகுதி வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். கூட்டணியில் இருக்கும்போது, இப்படி சில தொகுதிகள் மாறும்தான். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் எனக்கு வருத்தம் இல்லை.’’

“பி.ஜே.பி வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே, உங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலைச் சொன்னது சரிதானா?”

“மாநிலத்திலிருந்து வேட்பாளர் பரிந்துரைப் பட்டியல் டெல்லிக்குச் சென்றுள்ளது. பெரும்பாலும், அதே பட்டியல்தான் வெளியாகும். அந்த பரிந்துரைப் பட்டியலைத்தான், அதிகாரபூர்வ அறிவிப்பு என்று நினைத்து ராஜா சொல்லியிருக்கிறார். நல்லவேளை யாக அதே பட்டியலைத்தான் தலைமையும் சொல்லியுள்ளது. செய்திகளை முந்தித் தர வேண்டுமென ஊடகம் நினைப் பதுபோல, ராஜாவும் செய்திகளை முந்தித் தந்திருக்கலாம்.’’