பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ? | Sexual Abuse complaint on Perambalur ADMK MLA - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

“பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகர் பின்புலத்தில் இருக்கிறார்” என்கிற சர்ச்சையே முடியவில்லை. இப்போது பெரம்பலூரில் இதேபோன்ற ஒரு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மற்றுமொரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வின் பெயர் அடிபடுகிறது. இதுகுறித்து பெரியதாக மீடியாக்களில் செய்திகள் வராத நிலையில் விகடன் களத்தில் இறங்கி, பல்வேறு தகவல்களைத் திரட்டியது. அந்தத் தகவல்களை உடனுக்குடன் ‘விகடன் இணையத்திலும் வெளியிட்டுவருகிறோம். அவற்றைப் படிக்க இந்தக் கட்டுரையில் வைக்கப்பட்டிருக்கும் ‘க்யூ.ஆர் கோட்’-யை ஸ்கேன் செய்யலாம். சரி, என்ன நடந்தது, முழுமையாகவும் விரிவாகவும் பார்ப்போம். 

பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன்மீதுதான் இப்படியொரு புகார் ஏவப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண், காவல் துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிறகு, பெரம்பலூர் வழக்கறிஞர் ஒருவர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பின்னரும் முன்னேற்றம் இல்லை. இதுதொடர்பாக விகடன் இணையத்தில் தொடர்ந்து செய்திகள் வரவே... தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலையிட்டு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னரே, விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த சிலர், ‘‘பெரம்பலூரில் உள்ள லோக்கல் டி.வி-யில் கேமராமேனாக இருப்பவர் தலவேல் என்கிற வேல்முருகன். இவருக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ-வான இளம்பை தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேலைதேடும் பெண்களை குறிவைத்து, அவர்களை எம்.எல்.ஏ-வுடன் சந்திக்க அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளார் வேல்முருகன். ‘எனக்கு எம்.எல்.ஏ, அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பலரிடமும் தொடர்பு இருக்கிறது. அதனால், அரசு வேலையை வாங்கித் தருவேன்’ என்று ஆசைவார்த்தை கூறி இளம் பெண்கள் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக இவர்மீது உண்டு. இந்த நிலையில்தான் பெரம்பலூரில் இவர்களிடம் சிக்கிய பெண்ணின் வாட்ஸ்அப் உரையாடல், வைரலாகி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது’’ என்றனர்.