மிஸ்டர் கழுகு: ஆகாயத்தில் ரெட்டி... ஆழ்வார்பேட்டையில் ராவ்! - சம்திங் சந்திப்புகள் | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

மிஸ்டர் கழுகு: ஆகாயத்தில் ரெட்டி... ஆழ்வார்பேட்டையில் ராவ்! - சம்திங் சந்திப்புகள்

“ஆகாயம் மேலே பாதாளம் கீழே.... ஆனந்த உலகம் நடுவினிலே” என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்த கழுகாரிடம், “செய்தியுடன் வருவீர் என்று பார்த்தால், பாடலுடன் வருகிறீரே” என்று கேட்டதும் ‘‘சொல்கிறேன்!’’ என்று புன்னகையுடன் நம் முன் அமர்ந்தார்.

‘‘ராவ் ரகசியங்கள் என்று கடந்த இதழில் நீர் சொன்னது போலவே சந்திப்பும் நடந்தேறிவிட்டதே?’’

‘‘சந்திப்பு பெரிய விஷயம் இல்லை... அதற்குப் பின்னால் சந்தடிசாக்கில் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்துள்ளன... அவைதான் இந்தச் சந்திப்பின் ஹைலைட்ஸ்!’’

‘‘கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா?’’

‘‘சந்திரசேகர ராவை பி.ஜே.பி–யின் ‘பி’ டீமாகவே அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பார்க்கிறார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தெலங்கானாவின் சட்டமன்றத் தேர்தல், ஆந்திர மாநிலத் தேர்தலுடன் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, நான்கு மாநிலத் தேர்தல்களுடன் தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்துவதற்கு மறைமுகமாக பி.ஜே.பி–யிடம் உதவி பெற்றார் சந்திரசேகர ராவ். அதற்குப் பிரதிபலனாக நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி–க்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்தார் ராவ். அதைப் பற்றித்தான் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். ஆனால், இப்போது காங்கிரஸ் கை ஓங்கிவிடும் என்று சந்திரசேகர ராவ் நம்புகிறார்!’’

‘‘எப்படிச் சொல்கிறீர்?’’

‘‘சந்திரசேகர ராவ், கர்நாடக முதல்வர் குமாரசாமியைத் தொடர்புகொண்டு காங்கிரஸ் பக்கம் சாயும் தனது ஆசையை வெளிப்படுத்தி யிருக்கிறார். அதற்கு அவர், ‘நான் ராகுல் காந்தியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்னாராம். ராகுல் காந்தி தரப்பிடம், சந்திரசேகர ராவ் விஷயம் பற்றி குமாரசாமி பேச, ‘அவரை நம்ப முடியாது. அவர் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார். தேர்தல் முடிவுகள் வரும்வரை அவரிடம் எந்த உறுதியும் கொடுக்க வேண்டாம்’ என்று தகவல் சொல்லப்பட்டதாம். தொடர்ந்து, ‘தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று ராகுல் காந்தி நினைப்பதாக பாலிஷாகச் சொல்லி ஒதுங்கிக்கொண்டார் குமாரசாமி. அதன்பிறகே ஸ்டாலின் சந்திப்பை முடிவுசெய்தார் ராவ்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க