கல்குவாரிகள்... கல்பாலங்கள்... அழிக்கப்படும் ஏரி! - ஆபத்தில் அடையாறு! | Poor Maintenance of Adyar River - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2019)

கல்குவாரிகள்... கல்பாலங்கள்... அழிக்கப்படும் ஏரி! - ஆபத்தில் அடையாறு!

நீர்நிலைகள்தான் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரம். அவற்றை அழிப்பது மனித பேராசையின் உச்சம். நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அரசைப் பலமுறை கண்டித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ‘நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களைப் பாதுகாக்க, அனைத்துத்துறை அதிகாரிகளை உள்ளடக்கி, தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புப் பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்; நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காவல்துறையினர் ஒத்துழைக்காதபட்சத்தில், ராணுவத்தினரைக்கொண்டு அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்திய வழக்கு ஒன்றில் கடுமையாக எச்சரித்தது. ஆனாலும் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரு சோறு உதாரணம் அடையாறு!

அடையாறு நதிமூலம் என்ன?

சென்னையில் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அம்பலமாகின. அடையாளம் காணப்பட்ட ஆக்கிரமிப்புகளில் இதுவரை கால்வாசி அளவுகூட அகற்றப்பட வில்லை. அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இத்தகைய மெத்தனம்தான் மழை என்றாலே சென்னை மக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. சென்னை, அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளின் இன்றைய நிலைபற்றி அறிய முடிவுசெய்து, அடையாறு உருவாகும் மலைப்பட்டு பகுதிக்குச் சென்றோம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சேத்துப்பட்டு, மலைப்பட்டு, மாகாண்யம் ஆகிய கிராமங்கள் அருகருகே இருக்கின்றன. இங்குதான் இருக்கின்றது மலைப்பட்டு ஏரி. பருவமழைக் காலத்தில் இந்த கிராமங்களிலிருந்து வரும் நீர், சுற்றுவட்டார கிராமங்களின் ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர் எல்லாம் மலைப்பட்டு ஏரியை நிரப்பும். இங்கிருந்து வெளியேறும் உபரி நீர்தான் அடையாறு எனும் நதியை உருவாக்குகிறது. வழியில் படப்பை அருகே உள்ள ஆதனூர், ஒரத்தூர் பகுதிகளிலிருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஓடிவரும் உபரிநீரும் அடையாற்றில் கலந்து, மிகப் பெரிய ஆறாக உருவெடுக்கிறது. இது, சென்னை மாநகர் வழியாக வங்கக்கடலை அடைகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க