அலையாத்தி காடுகளுக்கு ஆபத்து! - மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்... | hydrocarbon project in Pichavaram Alaiyaathi Forest - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/05/2019)

அலையாத்தி காடுகளுக்கு ஆபத்து! - மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்...

நெடுவாசல் பகுதி மக்களை நிம்மதி இழக்கச்செய்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம், தற்போது சிதம்பரம் நோக்கித் திசைதிரும்பியிருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் கடல் பிரதேசமான பிச்சாவரம் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால், இங்குள்ள அலையாத்திக் காடுகள் அழியும் நிலை உருவாகியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலமான பிச்சாவரத்தில் சதுப்புநிலக் காடுகள் அதிகம். ஆறும் கடலும் சேரும் கழிமுகப் பகுதிகளில், இயற்கையாக உருவானவை இந்த சதுப்புநிலக் காடுகள். சதுப்புநிலங்களில் வளரும் தாவரங்கள், கடலில் சீறி வரும் அலைகளை ஆற்றுப்படுத்தக்கூடியவை. அதனால் அவற்றை, ‘அலையாத்திக் காடுகள்’ என்றும் அழைக்கிறார்கள். இவை ஆண்டு முழுவதுமே பசுமையாக இருக்கக்கூடியவை. பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை எனப்படும் அலையாத்தி வகை தாவரம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட நான்காயிரம் ஏக்கர் பரப்பில் சுரபுன்னைக் காடு அமைந்துள்ளது. இந்தக் காட்டை மட்டுமே நம்பி பலவகையான சிறு உயிரிகள், விலங்குகள்  என்று பல்லாயிரக்கணக் கான ஜீவன்கள் உயிர் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 122 வகையான பறவைகள் வலசை வந்து செல்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.   

இப்படிப் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.