மீண்டும் மோடி! - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள் | BJP won in Parliament Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/05/2019)

மீண்டும் மோடி! - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்

த்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அப்போது காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்வது மாதிரி ஒரு ட்வீட் போட்டிருந்தார். ‘நிலைமை இப்படியே போனால், நாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலை மறந்துவிட வேண்டியதுதான். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே திட்டமிட்டு நம்பிக்கையுடன் வேலை பார்க்கலாம்.’ உமர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை இப்போது தேர்தல் முடிவுகள் மூலம் நரேந்திர மோடி உணர்த்தியிருக்கிறார்.

ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும், ஆட்சிக்கு எதிராகப் பெரிதாக அதிருப்தி அலை இல்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி தோற்றது. அந்த மூன்று தேர்தல் முடிவுகளுமே, அந்தந்த மாநில பி.ஜே.பி அரசுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்பதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலுமே பி.ஜே.பி இப்போது பெற்றிருக்கும் வெற்றி, மோடியின் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. இங்கெல்லாம் பல தொகுதிகளில், பி.ஜே.பி வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, பழைய தேர்தல் முடிவுகளைப் பார்த்து கணக்குப்போடும் பலரையும் தலைச் சுற்ற வைத்திருக்கும். ஒவ்வொரு தேர்தலின் முடிவும் சில கணக்குகளால் தீர்மானிக்கப் படுகின்றன. பெரும்பாலான கணக்குகளைச் சரியாகப் போடும் கட்சி ஜெயிக்கும். தப்புக் கணக்கு போடும் கட்சிகள் தோற்கும். எதிர்க் கட்சிகள் எவ்வளவு மோசமாகத் தப்புக்கணக்குப் போட்டன என்பதை இந்தத் தேர்தல் முடிவு அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.