Published:Updated:

நீலகிரி: 3,000 குட்கா பாக்கெட்டுகள்... 417 மது பாட்டில்கள்! காய்கறி வாகனத்தில் நடக்கும் கடத்தல்!

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரிக்குக் காய்கறி வாகனங்கள் மூலம் இன்று ஒரே நாளில் பதுக்கிக் கொண்டுவரப்பட்ட 3,000 குட்கா பாக்கெட்டுகள், 417 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, 4 நபர்களைக்கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் கள்ளச் சாராயப் புழக்கத்தை கண்டறிய மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

நீலகிரியைப் பொறுத்தவரை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து மது வகைகளை தமிழகத்துக்குள் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில், எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களை மட்டுமே இரு மாநிலங்களுக்கு இடையே அனுமதித்துவருகின்றனர். இந்தநிலையில், இன்று காலை கர்நாடகாவிலிருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டியை நோக்கி தக்காளி ஏற்றிக்கொண்டு இரண்டு வாகனங்கள் வந்தன. அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கைதான இருவர்
கைதான இருவர்

இதில், தக்காளிக் கூடைகளுக்கு அடியில் மது பாட்டில்களை வைத்து, மேலே தக்காளிகளை நிரப்பிக்கொண்டு வந்திருப்பதைக் கண்டறிந்தனர். மது பாட்டில்கள் மற்றும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து, இரண்டு நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய காக்கநல்லா சோதனைச் சாவடி காவலர் ஒருவர், ``இரண்டு பிக்கப் வண்டிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றிலிருந்த தக்காளிப் பெட்டிகளை சோதனை செய்தோம். அனைத்துப் பெட்டிகளிலும் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பிக்கப் வண்டியில் 165 மதுபாட்டில்களும், இன்னொரு பிக்கப் வண்டியில் 206 மதுபாட்டில்களும் என 371 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தோம். கர்நாடகாவிலிருந்து நீலகிரிக்கு மதுபாட்டில்கள் கடத்திய தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த சஞ்சின்தேவ் (29), ஊட்டி பார்சன்ஸ்வேலி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (27) இரண்டு பேரையும் கைதுசெய்து வாகனத்தையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

இதேபோல் கர்நாடக மாநிலம், குண்டல்பேட் பகுதியிலிருந்து நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதிக்குக் காய்கறி ஏற்றிவந்த வாகனத்தை தேவாலா நீர்மட்டம் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், 3,000 குட்கா பாக்கெட்கள் மற்றும் 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கூவமூலா பகுதியைச் சேந்த முகமது (32), சலீம் (32) ஆகிய இருவரைக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு