நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டனில் முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்தியா மட்டும் அல்லாது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த நிலையில் 77வது பயிற்சி வகுப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் இந்தியில் சிறப்புரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,"இந்தியா பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வருவது மட்டுமல்லாமல், பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நிலத்திலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தவும் தயங்காது. இந்திய நாட்டின் எல்லைகளில் சவால்கள் நிறைந்திருந்தாலும், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்காது என நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
நமது அண்டை நாடுகள் ஒன்று இரண்டு போர்களில் தோற்ற நிலையில், மறைமுகமான யுத்தத்தை நம் மீது தொடுத்து வருகின்றன. பயங்கரவாதம் அதன் கொள்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவை குறிவைக்கத் தொடங்கியுள்ளன. இன்றைக்கு இரு நாடுகளிடையே போர்நிறுத்தம் வெற்றிகரமாக உள்ளது என்றால், அதற்கு நமது பலம்தான் காரணம்.

2016 ஆம் ஆண்டு எல்லை தாண்டிய தாக்குதல்கள் நமது மனநிலையை மாற்றின. நாம் முன்னெச்சரிக்கையாக செயல்படத் துவங்கினோம். இது 2019-ல் பால்கோட் வான்வழித் தாக்குதல் மூலம் மேலும் வலுவடைந்தது. பாதுகாப்புத்துறையில் சுய சார்பு என்பது நீண்ட யாத்திரை. பாதுகாப்புத்துறையில் சுயசார்பு அடைவது மட்டுமல்லாமல், சர்வதேச ஏற்றுமதியாளராக நாம் மாற வேண்டும். இந்தப் பயற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளின் அதிகாரிகள், தாங்கள் கற்றதை தங்கள் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்" என உரையை முடித்தார்.