நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் முதுமலை சுற்றுவட்டார பகுதிகளான தொரப்பள்ளி, அள்ளூர்வயல், குனில், புத்தூர் வயல் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே நெல் சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளன. நெற்கதிர்களை சுவைக்க காட்டுயானைகள் வனத்தை விட்டு வெளியேறி நெல் வயல்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் நள்ளிரவு குனில் வயல் பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகள் நெற்கதிர்களை சேதப்படுத்தின.

காட்டுயானைகளை விரட்ட முடியாமல் தவித்த விவசாயிகள் வனத்துறையினரின் உதவியை நாடினர். விடியற்காலை 4 மணி வரை போராடி யானைகளை வனத்துக்குள் விரட்டினர். தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டுயானைகள் நெல் வயல்களை நோக்கி வருவதால் அதே பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு விடிய விடிய காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த குனில் வயல் விவசாயிகள், " அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இழப்பீடு வழங்குவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மீதம் இருக்கும் வயல்களை வனத்துறை உதவியுடன் பாதுகாத்து வருகிறோம். அகழிகளை நல்ல முறையில் சீரமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும்" என்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " நெற்கதிர்களால் கவரப்படும் காட்டுயானைகள் வயல்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. கூடலூர் வனவர் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். நெருப்பு மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வயல்களுக்குள் நுழைய முயற்சிக்கும் யானைகளை விரட்டி வருகின்றனர். யானைகளை தடுக்க மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் " என்று தெரிவித்தனர்.