வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீவிர மழை காரணமாக சுற்றுலா தளங்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட சீசனுக்கான முன்னேற்பாடுகள் அரசு பூங்காக்களில் தொடங்கியுள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கையை மீறி ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவு பணி கொட்டும் மழையில் இன்று காலை தொடங்கியது. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மலர் நாற்றுகளை நடவு செய்து இந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
இரண்டாவது சீசன் நடவு பணிகள் குறித்து பேசிய நீலகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி, "நீலகிரியில் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் தொடங்க இருக்கிறது. காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற பகுதிகளிலிருந்து அஜிரேட்டம், சப்னேரியா, வெர்பினா, லூபின் போன்ற 60 மலர் ரகங்களின் விதைகள் பெறப்பட்டு சுமார் 4 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்ய இருக்கிறோம்.

இது மட்டுமல்லாது, கோலா லில்லி, டெல்பினியம், சால்வியா போன்ற 30 வகையான மலர் நாற்றுகளை 10 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்து வருகிறோம். இரண்டாம் சீசனுக்கு வரும் பயணிகளின் கண்களுக்கு இவை விருந்து படைக்கும்" என்றார்.