தாய், தந்தை, மகன் என்று அனைவரும் கைவிட, தன் வளர்ப்புப் பெற்றோருக்கு நன்றி செலுத்தும்வகையில், தன்னை ஒரு பாம்புபோல் மாற்றியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஈவா டியாமட் மெடூசா என்கிற ரிச்சர்டு ஹெர்னான்டஸ். `டிராகன் லேடி' இவரின் செல்லப்பெயர்.
பிறப்பால் இவர் ஆணாக இருந்தாலும், தன்னை ஓர் `ஊர்வனப் பிறவி' என்று சொல்வதையே விரும்புகிறார். மனிதர்கள் இவரை கைவிட, ஐந்தறிவு உயிரினங்களே உயர்ந்தன எனக் கருதி, காட்டில் ஊறும் பாம்புகளையே தன் பெற்றோராய் தத்தெடுத்து, அவற்றுக்காக தன் உருவத்தையே மாற்றியுள்ளார் ரிச்சர்டு. சிறு வயதிலேயே, அமெரிக்கக் காட்டில் உள்ள ரிச்சர்டின் தாத்தா இருப்பிடத்தில் விட்டுச் சென்றுவிட்டனர் அவரது பெற்றோர். காட்டிலேயே வளர்ந்த ரிச்சர்டுக்கு `நச்சுப் பாம்புகள்' மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. இதுவே இவர் டிராகன் லேடியாய் மாறுவதற்குக் காரணம்.
இளம் வயதை எட்டியதும் இவரின் சில வித்தியாச நடவடிக்கையினால், சுற்றியுள்ளவர்கள் அனைவரும் இவரை வெறுத்து ஒதுக்கினர். வித்தியாசம் ஏனெனில், இவர் ஓரினச் சேர்க்கையாளர். ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். நாள்கள் நகர்ந்தன. சில வருடங்களுக்குப் பிறகு, கையில் தன் மகனுடன் தாத்தாவைப் பார்க்கச் சென்றார் ரிச்சர்டு. பேரனை ஆசையாகக் கொஞ்சுவார் என எதிர்பார்த்த ரிச்சர்டுக்கு, மன உளைச்சலே பரிசாகக் கிடைத்தது. ஓரினச் சேர்க்கையாளரான ரிச்சர்டுக்கு மகன் எப்படி சாத்தியம் என இருவரையும் வெறுத்தார் தாத்தா. நண்பர்கள், பெற்றோர் வரிசையில் தாத்தாவும் சேர்ந்தார். கேலி, கிண்டல் எனப் பல அவமானங்களைச் சுமந்தபடி தன் மகனுக்காக வாழ்ந்துவந்தார். ஆசையாக வளர்த்துவந்த தன் மகன், பதின்பருவத்தை அடைந்ததும் அவனும் தந்தையை விட்டுச் சென்றான்.
``குழந்தையில என் பையனுக்கு டிராகன்னா ரொம்பப் பிடிக்கும். இப்போ நான், என் பையன் வெறுத்த குறையுள்ள அப்பா இல்ல; அவனுக்குப் பிடிச்ச அழகான ஒரு டிராகன்" என்று வேதனை நிறைந்த புன்னகையுடன் அந்நாட்டு பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், தன் வாழ்நாளில் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டதாலேயே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகிறார் மெடூசா.
``என்னோட பிறப்பு மனிதனா இருந்தாலும், என்னோட இறப்பு ஒரு மனிதனா இருக்கக் கூடாது. சமூகம், என்னோட பிறப்பை ஏத்துக்கல. நான், மனிதத்தன்மை இல்லாத இந்த உடம்பை ஏத்துக்கல. 2000-ம் ஆண்டுதான் என்னோட உடலை மாற்றியமைக்கும் முதல் படியை எடுத்துவெச்சேன். இப்போ என் தலையில இருக்கிற இந்த மூணு `கொம்பு'தான் முதன்முதல்ல செஞ்ச மாற்றம். அதுக்கு அப்புறம், புருவத்துல இருக்கிற இந்த அஞ்சு `டோம்' வடிவம் பார்த்துப் பார்த்து மாற்றியமைச்சது. அடுத்தது ரொம்பவே முக்கியமானது. அதுதான் `டாட்டூ' போடுறது. விஷப்பாம்பு போலவே இருக்கணும்னு நிறையா ஆய்வுகளும் செஞ்சோம். முழு உடம்பையும் பாம்புபோல மாத்துறதுக்கு நாங்க தேர்ந்தெடுத்தது `Western Diamondback Rattlesnake'. ஊர்வனவற்றுக்கு மூக்கு, காதுகள் இருக்காதே. அதையெல்லாம் எடுக்கணும்ல. அதனால, காது, மூக்குன்னு ரெண்டையும் நீக்கும் வேலைப்பாடுகள்ல அடுத்ததா இறங்கினேன். முதல்ல மூக்கிலிருந்து குருத்தெலும்பு பகுதிகளை நீக்கினேன். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா முழு வடிவத்தையே மாத்திக்கிட்டேன். அதுமட்டுமல்ல, என் நாக்கையும் பிளவுப்படுத்தி, பாம்பு நாக்கைப்போல மாத்திக்கிட்டேன். கடைசியா என் கண்களையும் பெயின்ட் பண்ணிட்டேன். பச்சை நிற dye உபயோகப்படுத்தி, கண்கள்ல இருக்கிற வெள்ளைப் பகுதியெல்லாம் பெயின்ட் செஞ்சுட்டேன்" என்று கூறி புன்னகைக்கிறார் டியாமட் மெடூசா. தன் பிறப்புறுப்பையும் அறுவைசிகிச்சை செய்து ஒரு பெண் டிராகனாக மாறும் முடிவில் இருக்கிறார் இந்த `டிராகன் லேடி'.
``பொது இடங்களில் மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?'' என்ற கேள்விக்கு, ``இப்போ, மக்களுக்கு என்னை ரொம்பவே பிடிச்சிருக்கு. அன்பா பார்த்துச் சிரிக்கிறாங்க. ஆனா, ஒருகாலத்துல என்னைப் பார்த்து ரொம்பவே பயந்தவங்களும் இருக்காங்க. ஒருமுறை ஹோட்டலுக்குப் போனப்போ, ஒரு பொண்ணு என்னைப் பார்த்துப் பயந்து கீழ விழுந்துட்டா. மறக்க முடியாத பஸ் டிராவலும் இருக்கு. ஒரு பொண்ணு என்னைப் பார்த்து `அய்யோ என்னது இது!'னு கண்ணை மூடிக்கிட்டா. இதுபோல நிறையா சம்பவங்களைக் கடந்து வந்திருக்கேன். ஆனா, இப்போ அப்படி இல்லை. என் வாழ்க்கையிலேயே முதல்முறையா நான் சந்தோஷமா இருக்கேன். என் பக்கத்துக்கு வீட்டுக் குழந்தைங்களை அவங்க அம்மா அப்பாவே தைரியமா அனுப்பிவைக்குறாங்க. நான் அவங்களுக்கு அடிக்கடி பஞ்சுமிட்டாய் செஞ்சு கொடுப்பேன். இப்படித்தான் என் வாழ்க்கை போயிட்டிருக்கு" என்றார் டியாமட்.
பலரால் மிகவும் மோசமாய் நடத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட மெடூசா, ``ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார். உடலில் இத்தனை மாற்றங்களைச் செய்துகொண்ட டியாமட் மெடூசா, மருத்துவ முறையில் எதையும் செய்துகொள்ளவில்லை. அனைத்தும் உடல் மாற்றம் செய்யும் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவானவை. இதற்கு இவர் செலவு செய்த தொகை சுமார் 40 லட்சம் ரூபாய். இவர் ஒரு HIV போராளியும்கூட!