மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 264

சதிராட்டம் போடும் சந்தேகப் பேய் !

வாசகிகள் பக்கம்

##~##

திருமணமான நாளிலிருந்து தொடங்கிய என் பிரச்னைக்கு, இப்போது முடிவுகட்டப் போவதாகச் சொல்கிறாள் என் மகள். அது சரியா... தவறா... எனத் தெரியாமல் குழப்பத்தின் நடுவில் நிற்கிறேன் நான்!

சிறுவயதில் இருந்தே எல்லோருடனும் கலகலவெனப் பழகும் சுபாவம் எனக்கு. திருமணமான புதிதில், 'ஏன் எல்லார்கிட்டயும் பல்லைக் காட்டுறே..? எதுக்கு கண்ட ஆம்பளைங்ககிட்ட எல்லாம் பேசறே..?’ என்று என் கணவர் திட்ட அதிர்ச்சியாகிப் போனேன். 'இது எந்த ஆணுக்கும் இருக்கும் எண்ணம்தான்!' என்று ஒதுக்கிவிடாமல், ஆண்களிடம் மட்டுமல்ல... பெண்களிடம்கூட சகஜமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

பிறந்த வீட்டுக்குச் செல்லும்போது எல்லாம், அவரும் லீவு போட்டுவிட்டு என்னுடனேயே இருப்பார். பெரியப்பா பையன், எதிர்வீட்டு மாமா, கூட படித்த நண்பன் என்று யாராவது என்னிடம் பேசினால் போதும், 'கல்யாணத்துக்கு முன்ன அவனுக்கும் உனக்கும் என்ன பழக்கம்?’ என்று சீறுவார். ஒருமுறை தெருமுனையில் நின்று, வீட் டுக்கு யாராவது வருகிறார்களா, போகிறார்களா என்பதை அவர் நோட்டம்விட்ட விஷயம் அறிந்தபோது... வெகுண்டு எழுந்து, 'இனி அந்த சந்தேகப் பேயுடன் வாழ மாட்டேன்' என்று கதறியழுதேன். வீட்டுப் பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

என் டைரி - 264

வருடங்கள் 23 ஓடிவிட்டன. இந்த இழிவான புத்தியைத் தவிர, வேறு கெட்ட குணங்கள் அவருக்கு இல்லை என்பதை சமாதானமாகக் கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளை மனதில் வைத்து, காலத்தைக் கழித்துவிட்டேன். தற்போது மகள்கள் பருவ வயதை அடைந்திருக்கும் நிலையில், அவர்கள் மீதும் தன் சந்தேகப் பார்வையை வீச ஆரம்பித்திருப் பதுதான் கொடுமை.

ஸ்கூலுக்கு, டியூஷனுக்கு, காலேஜுக்கு என்று செல்லும்போது எல்லாம் தன் மகள்களைத் தானே பின் தொடர்ந்து நோட்டமிடும் அந்த சந்தேக மிருகம், ஓர் அலுவலகத்தில் மதிப்பான வேலையில் இருக்கும் மூத்த மகளை, 'ஏன் லேட்..?’, 'ஆபீஸ் வாசல்ல எவன்கூட நின்னு பேசிட்டு இருந்தே..?’ என்று தினம் தினம் கேள்விகளால் சுடுகிறது. பள்ளியில் படிக்கும் என் இளைய மகளுக்கும் இதேபோன்ற அவஸ்தைகள்தான்.

'போதும்மா நாம பட்டது எல்லாம். கொஞ்ச நாள்ல எனக்கு நல்ல சம்பளத்தில் வெளியூர்ல வேலை கிடைக்கப் போகுது. நீயும் தங்கச்சியும் என்கூட வந்துடுங்க. இனியாச்சும் நரகல் வார்த்தைகளைக் கேட்காம வாழ்க்கையை நிம்மதியா கழிப்போம். தனியாக் கிடந்தாதான் இவருக்கு புத்தி வரும்’ என்று உறுதியாக அழைக்கிறாள் மூத்தவள். ஏற்கெனவே பட்ட சித்ரவதைகள்... தற்போது மகள்களுக்கு தொடரும் சித்ரவதைகள் எல்லாவற்றுக்கும் இது ஓர் விடிவாகத்தான் எனக்கும் படுகிறது. ஆனாலும், 'ஊர் உலகம் என்ன சொல்லும்..?’ என்ற பழைய பயமும் என்னைச் சூழ்கிறது. கணவரைப் பிரிந்து செல்வதா... சித்ரவதைப்படுவதா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 263ன் சுருக்கம்

''பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டிலாக, கிராமத்தில் வசிக்கும் வயதான எங்களை ஐந்து வருடங்களாக, அன்பாக கவனித்துக் கொண்டது பக்கத்து வீட்டு பெண்தான். திருமணமான அவளுக்கு, வேறு ஒருவனுடன் தொடர்பு இருந்ததை சமீபத்தில் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து அவளுடனான அன்பை பழையபடி தொடர முடியவில்லை. 'வயசான உங்களுக்கு மனுஷங்கதான் வேணும். அவங்க சொந்த விஷயம் பத்தி நமக்கு கவலையில்லை’ என்கிறாள் வெளிநாட்டிலிருக்கும் என் மகள். சுயநலத்துக்காக அவளை ஏற்றுக் கொள்வதா... வேண்டாமா? வழி சொல்லுங்கள் வாசகிகளே!''

வாசகிகளின் ரியாக்ஷன்...

ஒட்டிக் கொள்ளுங்கள்!

உங்களைப் பொறுத்தவரை எந்தவித பிரதிபலனும் பாராமல், உங்களை உறவுக்கு மேலாக கவனித்துக் கொண்டவள் அந்தப் பெண். அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சியுங்கள். இல்லையா... அவற்றை விமர்சிக்காதீர்கள். இது சென்ஸிட்டிவான விஷயம் என்பதால், இதைப் பற்றி சிந்திப்பதை விடுத்து, அவளுடனான உறவை மறுபடி துளிர்க்க செய்வது பற்றி யோசியுங்கள். உங்கள் சொந்த மகளுக்கு இருக்கும் தெளிவு, வயதான உங்களுக்கு நிச்சயம் வரவேண்டும். சொத்து, சுகம் என எது விட்டுப் போனாலும்... நம்மை விட்டு போகாதவர்கள்... நாம் வாழ்க்கையில் சம்பாதிக்கும் நல்ல உள்ளங்கள்தான் என்பதை மனதில் வையுங்கள்.

- எஸ்.ஜெயலட்சுமி, கும்பகோணம்

விலகி நில்லுங்கள்!

மனது ஒட்டவில்லை என்றால் விலகிவிடுங்கள். வலுக்கட்டாயமாக சேரும் எதுவும் நிலைக்காது. மனதும் அது போலதான். திருமணமான பெண்ணுக்கு தவறான தொடர்பு இருப்பதை எந்தக் குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நம் வீட்டில் அப்படி நடந்தால் ஏற்றுக் கொள்வோமா என்ன? உங்கள் சொந்த மகளுக்கும் இதைப் புரிய வையுங்கள். அந்தப் பெண்ணின் உறவை மேலும் தொடர்ந்தால், அவளுடைய தவறான உறவுக்கு நீங்களும் உறுதுணையாக இருக்கிறீர்கள் என்று ஊர் உலகம் நினைத்துக் கொள்ளும். வயதான காலத்தில் உங்களுக்கு அப்படிப்பட்ட இழிவு வேண்டாம். விலகியது விலகியதாகவே இருக்கட்டும்.

- எஸ்.சத்யா முத்து ஆனந்த், வேலூர்

நோ ஒன் ஈஸ் பெர்ஃபெக்ட்!

'நோ ஒன் ஈஸ் பெர்ஃபக்ட்’ என்ற ஆங்கில வாசகத்தை படித்திருப்பீர்கள். எல்லோரிடமும் குறைகள், தவறுகள் இருக்கின்றன. கடவுளே தவறிழைத்து, அதன் மூலம் நமக்கு பாடம் கற்பிக்கிறார் என்கிறபோது... நாமெல்லாம் எம்மாத்திரம். மிகமுக்கியமாக, நடக்கும் ஒரு விஷயத்தை மட்டும் வைத்து... அதனுடைய உண்மையை நீங்களாகவே தீர்மானித்து விடாதீர்கள். கோபத்திலோ, வேறு எந்த காரணத்தினாலோகூட அந்தப் பெண்ணின் கணவர் குடும்பச் சண்டையில் அப்படி சொல்லியிருக்கலாம். அதற்குள்ளாக எல்லாம் நீங்கள் போக வேண்டிய அவசியமேயில்லை. உங்களைப் பொறுத்தவரை அந்த பெண் தங்கமானவளாக, பிரதிபலன் இல்லாதவளாக மட்டுமே இருந்திக்கிறாள். அப்படிப்பட்ட மனிதர்கள் கிடைப்பது பொக்கிஷம் போன்றது. தேவையில்லாத எண்ணங்களால் அதை இழந்து விடாதீர்கள்.

- சுமா, திருச்சி