Published:Updated:

சந்திக்கும் வேளையில்...

சந்திக்கும் வேளையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திக்கும் வேளையில்...

முதல் சந்திப்பு

திருமணம்... இரண்டு இதயங்கள் ஒன்றாக இணையும் அற்புதத் தருணம். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சந்தித்து, பேசி, பழகி, காதலித்து, நன்கு புரிந்துகொண்ட பின் இல்வாழ்க்கைக்குள் நுழைவது ஒருவகை. வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்து, பெரியவர்கள் பார்த்து முடிக்கும் திருமணத்தால் புதுவாழ்வைத் துவங்குவது மற்றொருவகை. இந்த இரண்டாம் வகையில் பெண் பார்க்கும் படலம், நிச்சயம் என ஒவ்வொரு சடங்கும் முடிந்து இவர்/இவள்தான் தன் வாழ்க்கைத் துணை என்பது முழுமையாக முடிவான பிறகே பெண்ணின் போன் நம்பர் மணமகனுக்குக் கிடைக்கிறது. சிலர் பெண்ணை இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என ஏதேதோ செய்யப்போக, அந்தப் பெண் பயந்து ‘இவன் நமக்குச் சரிப்பட்டு வருவானா?’ என்று யோசிக்கும் அளவுக்குச் சிக்கலாகிவிடுகிறது. மறுபுறம், `இதை எல்லாம் சொன்னால் ஏதாவது பிரச்னை வருமோ?’ என்று பயந்து பயந்து சில விஷயங்களை மறைத்து, திருமணத்துக்குப் பின் அது தெரியவரும்போது பிரச்னையாவதும் உண்டு. புதிதாக மணவாழ்க்கைக்குள் நுழைபவர்கள், தன் துணையை எப்படி அணுக வேண்டும் என சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பி.பி.கண்ணன் மணமக்களுக்கு வழங்கும் டிப்ஸ்..

மணமகனுக்கு...

1. பெண்ணின் போன் நம்பர் கிடைத்ததும் பேசுவதில் தவறு இல்லை. அதற்காக மொத்த விஷயத்தையும் முதல்முறையே பேச வேண்டும் என்பது இல்லை. இனி வாழ்க்கை முழுவதும் ஒருவரோடு ஒருவர் பேசத்தான் போகிறீர்கள். எனவே, அளவாகப் பேசுங்கள்.

சந்திக்கும் வேளையில்...

2. சில பெண்களுக்குப் பேச்சைத் தொடங்குவதில் மெல்லிய தயக்கம் இருக்கும். எனவே, இயல்பாகப் பேசி அவர்கள் பேசுவதை ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் பெண்ணுடன் பேசும் அளவுக்கு அவரும் உங்களுடன் இயல்பாகப் பேச அனுமதியுங்கள். அவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்.

3. உங்கள் வாழ்க்கைத்துணையை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைச் சொல்லாதீர்கள். எது நீங்களோ, அதை இயல்பாக வெளிப்படுத்துங்கள். இதனால், பின்னாள்களில் தேவையில்லாத ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

4. அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துப் பேசுங்கள். அவர் உணர்வுபூர்வமாக ஏதேனும் பேசும்போது பொறுமையாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். அப்போது நீங்கள் தர்க்கமாகப் பேசுவது அவருக்கு உங்கள் மீதான உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் குறைக்கும்.

5. உங்களால் முடியாத, தவறான வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள். உங்களால் எது முடியுமோ அதை மட்டுமே செய்வதாக வாக்களியுங்கள். இது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கவே செய்யும்.

6. சிறிய சிறிய பரிசுகள், அங்கீகாரங்கள் எப்போதுமே பெண்கள் விரும்புபவை. ஓர் அழகான காலைவாழ்த்துகூட மனதை உற்சாகமாக்கிவிடும். அவர்களை மதிப்பதும் பொருட்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

7. யாரைப் பற்றியும் குறைகூறாதீர்கள்... முக்கியமாக, உங்கள் பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகளைக் குறைவாகப் பேசாதீர்கள்! இது அவர்களைப் பற்றிய தவறான சித்திரத்தை உங்களின் எதிர்காலத்துணைவருக்கு ஏற்படுத்திவிடக்கூடும்.

8. உங்கள் குடும்பச்சூழல், பொருளா தாரப் பின்னணி, விருப்பு வெறுப்பு பற்றி எல்லாம் உகந்த சூழலில் முன்பே சொல்லிவிடுங்கள். இது உங்கள் துணைவருக்குத் தேவையற்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ஏற்படுத்துவதைத் தடுக்கும்.

9. திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பிறப்பு, பணிக்குச் செல்வது, படிப்பு போன்றவற்றில் மணப்பெண்ணுக்கு என்ன கருத்து உள்ளது எனப் பொறுமையாகக் கேட்டறியுங்கள். அவரின் விருப்பத்துக்கு செவிசாய்த்து இருவருமாகச் சேர்ந்து நல்ல முடிவுகளை எடுங்கள்.

10. அடிக்கடி போன் செய்து பேசிக்கொண்டே இருப்பது, போனே செய்யாமல் இருப்பது, சந்திப்பதாகச் சொன்ன நேரத்தில் போய் சந்திக்காமல் இருப்பது போன்றவற்றைக் கட்டாயம் தவிருங்கள். இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும்.

மணமகளுக்கு...

1. ஆண்களுக்குப் பெண்களுடன் பேசுவதில் அதீத ஆர்வம் இருக்கும். சிலருக்கு அதற்கான சூழல் அமைந்திருக்காது என்பதால், பேசாமலே இருந்திருப்பார்கள். தனக்கென ஒரு பெண் கிடைத்ததும் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டே இருப்பார்கள். எனவே, பொறுமையாகக் காது கொடுத்து கேளுங்கள்.

2. ஆண்கள் மிக வேகமாக உடல் சார்ந்த உரையாடல்களுக்குள் நுழைவார்கள். உடனடியாக அதை ஊக்கப்படுத்தும் விதமாகப் பேசவும் வேண்டாம்; அதை முழுமையாக நிராகரிக்கவும் வேண்டாம். பெண் உடல் சார்ந்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை களையும்விதத்தில் பேசவும். இது அவர்களுக்கான புரிதலை மேம்படுத்த உதவும்.

3. உங்களின் பழைய வாழ்க்கை குறித்து திருமணத்துக்கு முன்பே வெளிப்படையாக சொல்வதில் தவறில்லை. அதுபோல அவரின் பழைய வாழ்க்கை பற்றியும் காதுகொடுத்துக் கேளுங்கள். இது ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் தேவையற்ற சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

4. திருமணத்துக்குப் பிறகு பணிக்குச் செல்வது, கூட்டுக்குடும்பமாக வாழ்வது போன்றவை குறித்த உங்களின் விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால் தேவையற்ற விவாதங்களைத் தடுக்கலாம்.

5. தேவையற்ற சந்தேகங்கள் அன்புக்கு எதிரி. உங்களுக்கான சுதந்திரத்தை அவர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்பட்சத்தில், அவரின் சுதந்திரத்தில் நீங்களும் அவசியம் இல்லாமல் தலையிடாதீர்கள்.

6. வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் வருமானத்தைத் திருமணத்துக்குப் பிறகு என்ன செய்வது என்பதுபற்றி வெளிப்படையாகப் பேசி முடிவெடுங்கள். இது உங்களின் சுதந்திரத்தையும் தன்மானத்தையும் காக்கும் முக்கியமான விஷயமாகும். ஆனால், நீங்கள் எடுத்த முடிவுதான் சரி என்று பிடிவாதமாக இல்லாமல், இருவரும் சேர்ந்து எடுக்கும் நல்ல முடிவாக அது இருக்கட்டும்.

7. எதிர்காலக் கணவரின் வருமானம், அவரின் கமிட்மென்ட்டுகள் போன்ற வற்றைத் தவறாமல் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுபோலவே உங்களது வருமானத்தையும் தெரியப்படுத்துங்கள். எதிர்காலத்தை எப்படித் திட்டமிடுவது என்றும் பேசிக்கொள்ளுங்கள்.

8. அவரின் விருப்பம், சுவை, ரசனை என்னவென்று அறிந்து வைத்திருங்கள். உங்களின் விருப்பங்களையும் தெரியப் படுத்துங்கள். இருவருக்கும் ஒரே ரசனையும் விருப்பமும் இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், விருப்பங்கள், ரசனைகள் மட்டுமன்றி பகிர்தலும், புரிந்து கொள்ளலும் மிக அவசியம்.

9. பெண்களை இம்ப்ரெஸ் செய்வதற் காக ஆண்கள் தொடக்கத்தில் நிறையப் பரிசுகள் தருவார்கள்; வாயாரப் புகழ்வார்கள். திருமணத்துக்குப் பின்பு உடைமை மனோபாவம் (Possessiveness) ஏற்படுவதால், அது சற்று குறையக்கூடும். எனவே, இதனால் அன்பு குறைந்துவிட்டது என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

10. `நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்று இருவருமே எண்ண வேண்டாம். விஷயங்களைப் பேசி விவாதித்து, எது இருவருக்கும்  நல்லதோ அந்த முடிவை எடுங்கள். அவசியமானால் விட்டுக்கொடுத்தத் தயங்காதீர்கள்.

சந்தோஷமான மணவாழ்க்கை அமைய  வாழ்த்துகள்!

-  இளங்கோ கிருஷ்ணன்