மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!

துரை மாநகரத்தைப்போல, அதன் வணிகச் சந்தையும் தொன்மையானது. மீனாட்சி அம்மன்  கோயிலைச் சுற்றியுள்ள ஆடி வீதிகள், கோயில் மதிலைத் தாண்டியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், வெளி வீதிகள் என எல்லா வீதிகளிலும் வியாபாரம் எப்போதும் களைகட்டுகிறது. என்றாலும், இவற்றில் மிக முக்கியமானவை, மாசி வீதிகள்தான். கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி என்று அழைக்கப்படும் மாசி வீதிகள்தான் மதுரை மாநகர வர்த்தகத்தின் மையமான கேந்திரம்.  

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!

என்னென்ன வியாபாரம்?

மாசி வீதிகளில் வெற்றிலையும், கொட்டைப் பாக்கும் கிடைக்கும். உயர் ரகமான பிளாட்டினம், வைரம், முத்து கிடைக்கும். பத்து ரூபாய்க்கு மூன்று கைத்துண்டும் வாங்கலாம். லட்சம் ரூபாய்க்கு காஞ்சிப்பட்டும் வாங்கலாம். பத்து ரூபாய்க்கு கூறுகட்டிய பூண்டு, இஞ்சியும் வாங்கலாம்; லோடு கணக்கிலும் வாங்கலாம். நான்கடி அகலத்திலும் துணிக்கடை உண்டு, நான்கு மாடிகளுக்கு எழும்பி நிற்கும் கடைகளும் உண்டு.

திருமணம் முடித்துக்கொடுக்கத் தேவையான அரிவாள்மனை, அஞ்சறைப்பெட்டி முதல் பீரோ, கட்டில், மெத்தை, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஆடைகள், நகைகள் வரை மொத்தமாக வாங்கிச் செல்லலாம். உண்டியல் முதல் தண்ணீர் பாட்டில் வரை வாங்கலாம். இந்தப் பகுதியில் கிடைக்காத பொருள்களே இல்லை. மாசி வீதிகளுடன் ஒட்டியுள்ள வெண்கலக்கடைத் தெரு, நவபாத்கானா தெரு, சின்னக்கடை, ஜடாமுனி கோயில் தெரு, பத்து தூண், விளக்குத்தூண், மஞ்சனக்காரத்தெரு என்று அனைத்திலும் வியாபாரம்தான்.

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!



ரூ.1 முதல் ரூ.1 லட்சம் வரை...


மாசி வீதியைப் பற்றி 44 வருடங்கள் அறிந்தவரும், தமிழ்நாடு உணவுப் பொருள்கள் வியாபாரிகள் சங்கத் தலைவருமான ஜெயப்பிரகாசத்திடம் கேட்டோம். “மதுரை மக்களுக்கும் சரி, அருகிலிருக்கும் மாவட்ட மக்களுக்கும் சரி, வீட்டு விசேஷத்துக்கோ, பண்டிகைக்கோ என்றில்லாமல் எந்தப் பொருள் தேவையென்றாலும் அவர்களுக்கு ஞாபகம் வருவது மதுரை மாசி வீதிகள்தான். ஒரு ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரையுள்ள அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைக்கும். மக்கள் தூரத்திலிருந்து இங்கு வர, அவர்கள் ஊரில் கிடைப்பதைவிட விலை மலிவாகக் கிடைப்பதும், பல ரகங்களைப் பார்த்து வாங்கலாம் என்பதும் ஒரு காரணம்.

என்னென்ன கிடைக்கும்?

பாரம்பர்யமான வியாபாரிகள் நிறைந்த பகுதி இது. மாசி வீதிகள் நான்கில், கீழ மாசி முழுவதும் மளிகைக்கடைகள், பருப்பு மற்றும் நவதானியம், எண்ணெய், அப்பளம், வற்றல், முந்திரி, பாதாம், கடலை, வாசனைப் பொருள்கள், நாட்டு மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் நிறைந்திருக்கின்றன. இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் உண்டு. அதையடுத்து விளக்குத் தூணிலிருந்து தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி முழுக்க சிறிய, பெரிய துணிக்கடைகள், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள், நகைக் கடைகள், ஹார்டுவேர் வியாபாரம் என்று குவிந்திருக்கிறது. வடக்கு மாசி வீதியெங்கும் வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், பைப், டைல்ஸ் கடைகள், ஹோல்சேல் பழக்கடைகள் உள்ளன. மாசி வீதிகளின் குறுக்கு சந்துகளில் துணிக்கடைகளும், நகைக்கடைகளும் நிரம்பி யுள்ளன. ஆவணி மூல வீதிகளில் நகைக்கடைகளும், பர்னிச்சர் கடைகளும் உள்ளன. இதில் சாலை யோரக் கடைகளும் அதிகம்.

இந்த மாசி வீதிகள் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதால் சாலை வசதி குறுகலானது. அதனால், கால மாற்றத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இந்தப் பகுதியில் கார் பார்க்கிங் ஒன்று அமைத்துத் தருமாறு தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரி வருகிறோம்” என்றார்.

கோடிக் கணக்கில் வியாபாரம்


மாசி வீதியில் சுற்றி வந்தால் இந்தியாவைச் சுற்றி வந்தது போலிருக்கும். இங்குள்ள துணிக் கடைகள்,  நகைக்கடைகளில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. மாசி வீதிகளில் தமிழர்களோடு கலந்து பிற மாநிலத்தவரும் வியாபாரம் செய்துவருகிறார்கள். துணிக்கடைகள், ஹார்டுவேர், எலெக்ட்ரானிக்ஸ் கடைகளை குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தினர் அதிகம் வைத்துள்ளனர். மேட்ரஸ், காயர், பர்னிச்சர் கடைகளைக் கேரள மாநிலத்தினர் வைத்துள்ளனர்.

தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் மாசி வீதியில் தீபாவளி சமயத்தில் நடக்கக்கூட இடமிருக்காது. ஒரு வாரத்துக்குப் போக்குவரத்து நிறுத்தப்படும். அப்படி ஜேஜே என்றிருக்கும். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபட வருகிற வெளியூர் மக்கள், மாசி வீதிகளில் ஒரு ரவுண்டு அடித்து பர்ச்சேஸ் செய்கிறார்கள்.
 
- செ.சல்மான்

படங்கள் : வி.சதீஷ் குமார்.

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!

எங்களிடம் வாங்கினால்தான் மக்களுக்குத் திருப்தி!   

அங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி!

மாசி வீதியில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்துவரும் வியாபாரிகள் பலரைச் சந்தித்தோம். மதுரை மட்டுமல்லாமல், மதுரையைச்  சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் பொருள்களை வாங்க மக்கள் இங்கே வருவதாகப் பெருமையோடு சொல்கிறார்கள் பல ஆண்டுகளாக இங்கு தொழில் செய்துவரும் வியாபாரிகள். இன்று மால்கள் தொடங்கி ஆன்லைன் வர்த்தகம் வரை வணிகம் என்பது பல கட்டமைப்புகளுக்கு மாறியிருந்தாலும் மக்கள் பாரம்பர்யத்தை மறக்க வில்லை என்கிறார்கள் வியாபாரிகள். எண்ணெய் கடை வைத்திருக்கும் சபேஷனிடம் பேசினோம். “நாங்கள் ஐம்பது வருடங்களாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். சூப்பர் மார்க்கெட்டுகள் பல வந்தாலும் எங்களைத் தேடி  வாடிக்கையாளர்கள் வரவே செய்கிறார்கள். பெரும் பாலான மக்களுக்கு இங்கு நேரில் வந்து பொருள்கள் வாங்குவதில்தான் திருப்தி” என்றார்.  மளிகைக்கடை வைத்து நடத்தி வரும் செல்வக் குமாரிடம் பேசினோம். “பல ஊர் மக்களும் வந்து செல்லும் பெரிய பஜார் இது. எல்லாப் பொருள்களை யும் ஒரே ஏரியாவில் வாங்கிச் சென்றுவிடலாம். பெரிய கடைகளை விட, இங்கு பொருள்கள் விலை குறைவாகக் கிடைக்கும்” என்றார்.