
அங்காடித்தெரு! - 5 - சேலம் செவ்வாய்பேட்டை!
“சேலத்தின் வணிக மையமாக இருப்பது சேலம் செவ்வாய்பேட்டை. கிழக்கு மேற்காகச் செல்லும் இந்த அங்காடித் தெருவின் இருபுறங்களில் பல்பொருள் விற்பனைக் கூடங்களும், இறக்குமதி செய்யும் லாரிகளும், பொருள்களை வாங்குவதற்குக் குவியும் நுகர்வோர் கூட்டங்களும் அலைமோதும். மொத்தத்தில் இந்த ஏரியா, வருடம் முழுவதும் விழாக்கோலமாகவே இருக்கும்.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் இறக்குமதி செய்யும் முதல் இடமாகவும், முதல் விற்பனை அங்காடியாகவும் இப்பகுதி இருப்பதால், மற்ற மாவட்டங்களைவிட இங்கு உணவு, மளிகைப் பொருள்களின் விலை குறைவாகவும், தரமானதாகவும் கிடைக்கும்’’ என்கிறார்கள்.
செவ்வாய்பேட்டையில் மேலும் என்ன சிறப்புகள் என்ன என்பதைப் பற்றி விவரிக்கிறார் சேலம் மாநகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன்.
உருவான கதை
சேலம் 1886-ல் உருவானது. மிகப் பெரிய கிராமமாக இருந்த இந்தப் பகுதி, வசதிகள் நிறைந்த நகரமாக மாறிவந்த காலம் அது.அக்காலகட்டத்தில் உணவு தானியங்கள், அன்றாட உணவுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருள்கள் ஆகியவற்றுக்குச் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியே வணிக ஸ்தலமாக உருமாறியது. அந்தக் காலத்தில் லீபஜார் வர்த்தக சங்கத்திற்கு உரிமையான செவ்வாய்பேட்டை அருள்மிகு காளியம்மன் கோயிலைச் சுற்றி இருந்த பகுதியில் மட்டுமே இப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மொத்த விற்பனை அங்காடிகள் நிறைந்த பகுதியாக அது விளங்கியது.
சுற்றுவட்டாரக் கிராமத்திலிருந்து சேலம் நகருக்குத் தேவையான விவசாய விலை பொருள்கள் அனைத்தும், விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வந்தன. குறிப்பாக, அன்றாட உணவுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் தங்குதடையின்றி கிடைக்கக் கூடிய வணிக ஸ்தலமாக உயர்ந்தது.
இந்நிலையில், 1918-19-ம் ஆண்டுகளில் சேலத்தில் எலிகளால் வரும் பிளேக் என்ற நோய் கடுமையாகத் தாக்கியது. அப்போது சேலம் மாவட்ட ஆட்சியராக மறை.திரு.லே என்கிற ஆங்கிலேயர் இருந்தார். பிளேக் நோயின் கடுமையான தாக்கத்தை உணர்ந்த அவர், விவசாய விலை பொருள்களின் அங்காடிகளைச் சற்று ஒதுக்குப்புறமாக, பிளேக் நோய்க்குக் காரணமான எலிகள் அண்டாத வகையில் அமைத்தார்.

அவருடைய பெரும் முயற்சியின் காரணமாகவே இன்றைய லீ பஜார் என்கிற பெயரில் இயங்கிவரும் தமிழகத்தின் மிகப் பெரிய விவசாய விளைபொருள்களின் அங்காடி உருவானது. இது 1926-ம் ஆண்டு உருவாகத் தொடங்கியது. இந்த லீபஜார், மொத்த விற்பனைக்கு உரியதாக அமைந்திருந்தது. அன்றாட நுகர்வோருக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்யும் சில்லறை வணிகர்களும் இப்பகுதியில் இருந்தார்கள். இந்தச் சில்லறை வணிகர்கள், மொத்த விற்பனை பகுதியிலிருந்து விலகி, செவ்வாய்பேட்டையில் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். அது படிப்படியாக உயர்ந்து இன்றைய நிலையில், மிகப் பெரிய வணிக ஸ்தலமாக இருந்து வருகிறது.
கிடைக்கும் பொருள்கள்
நுகர்வோரின் அன்றாட உணவுத் தேவைக்கான அரிசி, கோதுமை, சிறு தானியங்களான ராகி, கம்பு, சோளம் மற்றும் சமையலுக்குத் தேவையான எண்ணெய்கள், மளிகைப் பொருள்கள் போன்றவை இப்பகுதியில் தங்கு தடையின்றி கிடைக்கும். வட மாநிலங்களிலி ருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் துவரை, அவரை, பாசிப் பருப்பு, கடலை, கொள்ளு, நரிப் பயிர், உளுந்து போன்ற பருப்பு வகைகளும், முந்திரி, திராட்சை போன்ற உலர் பழங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு, பல மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது.
லீபஜார் என்கிற மொத்த விற்பனை அங்காடிக்கு அருகிலேயே செவ்வாய்பேட்டை வணிக பகுதியும் இருப்பது வெளியூர் வணிகர்களுக்கு வசதியாக இருக்கிறது. புளி, மிளகாய், மஞ்சள், வெல்லம் போன்ற பொருள்கள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும். தமிழகத்தில் முதல் இறக்குமதி செய்யும் இடமாக இப்பகுதி இருப்பதாலும், முதல் விற்பனை இங்கிருந்து தொடங்குவதாலும் பொருள்களின் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைக்கிறது.
செவ்வாய்பேட்டையைச் சார்ந்து இருக்கும் இடங்கள்
லீ பஜார், செவ்வாய்பேட்டை இடையே பால் மார்க்கெட் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய காய்கறி சந்தை இந்தப் பகுதிக்கு மேலும் வலுவூட்டுகிறது. இப்பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்களுக்கு சரக்குகளை வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கென்றே தனியாக லாரி மார்க்கெட்டும், தனியாக ரயில் நிலையமும் இருப்பது பெரும் உதவியாக இருக்கிறது.
பெரும்பாலான வங்கிகளின் கிளைகள், அஞ்சல் நிலையம், உள்ளூர் மற்றும் வட நாட்டு உணவகங்கள், அரிசி ஆலைகள், பருப்பு தயாரிப்பு ஆலைகள், சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் எனப் பல நிறுவனங் கள் செவ்வாய்பேட்டை அங்காடித் தெருவைச் சார்ந்து இருக்கின்றன.
குட்டி ராஜஸ்தான்
இப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ராஜஸ் தானைச் சேர்ந்த முதலாளிகள் பல்வேறு கடைகள் வைத்திருக் கிறார்கள். இவர்களுடைய ஒவ்வொரு கடையிலும் 10 முதல் 30 பேருக்கும் மேற்பட்ட வர்கள் வேலை பார்க்கிறார்கள். மொத்தமாக 1500-க்கும் மேற்பட்ட ராஜஸ்தானியர்கள், குடும்பத்தோடு 25 ஆண்டுகளாக செவ்வாய்பேட்டைப் பகுதியில் குடியிருக்கிறார்கள்.
இவர்கள் இங்கேயே வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு முதலியவற்றைப் பெற்று, தமிழர்களைப் போலவே வாழ்ந்துவருகிறார்கள். இந்த ஏரியா, குட்டி ராஜஸ்தானைப் போலவே இருக்கும்.
-வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்
தரமாகவும், விலை குறைவாகவும் பொருள்கள் கிடைக்கும்!
சேலம் செவ்வாய்பேட்டை நெல், அரிசி உணவுப் பொருள்கள் மொத்த வியாபாரிகள் சங்கச் செயலாளர் ரத்தினவேல், “சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரிசிக் கடைகள் இருக்கின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் கிடைக்கும். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரையிலானோர் பயன்படுத்தும் வகையில் பல ரகங்கள் இருக்கின்றன. ஒரு கிலோ ரூ.25 முதல் 56 வரைக்கும் அரிசி ரகங்கள் கிடைக்கும். மற்ற இடங்களைவிட இங்கே ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை குறைவாகக் கிடைக்கும்’’ என்றார்.
சேலம் செவ்வாய்பேட்டை மளிகை அண்டு ஷாப் வர்த்தக நலச் சங்க தலைவர் நடராஜன், “சேலம் செவ்வாய்பேட்டையில் தரமான சரக்கு நியாயமான விலையில் கிடைக்கும். உதாரணத்துக்கு, 100 கிலோ துவரம் பருப்பு 6,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இன்று காலை 100 கிலோவுக்கு 500 ரூபாய் விலை குறைந்தது என்றால், விலை அறிவித்த அரை மணி நேரத்திலிருந்தே 5,500 ரூபாய்க்குக் கொடுப்போம். அதேபோல விலை அதிகரித்தால் பழைய விலைக்கு வாங்கப்பட்ட பொருள்களை அனுசரித்துக் கொடுப்போம். இதுதான் செவ்வாய்பேட்டையின் சிறப்பு.
சீரகம், கடுகு, வெந்தயம், சோம்பு ஆகியவை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்தும், கடலை பருப்பு உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இருந்தும், துவரம் பருப்பு கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் இருந்தும், உளுந்து, மிளகாய் ஆந்திராவிலிருந்தும் நேரடியாகச் சேலத்திற்கு வருகின்றன. இங்கிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற பல மாவட்டங்களைச் சேர்ந்த 70 சதவிகித வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். அதனால், அவர்கள் ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி, லாரி வாடகை அனைத்தும் சேர்த்து விற்பார்கள். நாங்கள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பதால் தரமானதாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.
வருடத்துக்குத் தேவையான மளிகைச் செலவுகளை மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விருதாச்சலம், கரூர், தருமபுரி போன்ற மாவட்டங்களில் நேரடியாக நுகர்வோர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து வாங்கிச் செல்வார்கள்.
செவ்வாய்பேட்டை மார்க்கெட்டைப் பொறுத்தவரை முதலில் அரிசிக் கடைகள், வெல்லம் மண்டிகள், ஆயில் கடைகள், நுகர்பொருள் நிலையங்கள், மளிகைக் கடைகள், நகைக்கடை கடைகள், பாத்திரக்கடைகள், இரும்பு பெயின்ட் கடைகள், மரக்கடைகள், மைக்கா கடைகள் என உலகத்திலேயே இதுபோன்ற ஒரு மார்க்கெட்டைப் பார்த்திருக்க முடியாது’’ என்றார்.