மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!

அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!

அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!

மிழகத்தின் மையப்பகுதியான திருச்சிக்குக் கூடுதல் பலம், தமிழகத்தின் பெரு நிறுவனங்கள் அனைத்தும் திருச்சி மெயின்கார்டு கேட் மற்றும் மலைக்கோட்டைப் பகுதியைச் சுற்றியே குவிந்து வருவதுதான். 

அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!

திருச்சி மெயின்கார்டு கேட் என்பது கோட்டை வாசலாக இருந்தது என்பது வரலாறு. அதேபோல், கடந்த 1946-ம் ஆண்டு மகாத்மா காந்தி திருச்சிக்கு வந்ததன் நினைவாக திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. இப்படி பழைமை வாய்ந்த திருச்சியின் மலைக்கோட்டைப்  பகுதியில், தற்போது எழுந்துள்ள பிரமாண்டமான கட்டடங்கள் பிரமிக்க வைக்கின்றன.

அவையனைத்தும் வணிக வளாக நிறுவனங்கள் என்பதுதான் சிறப்பு. திருச்சியின் வணிகப் பகுதியாக விளங்கும்  சிங்காரத் தோப்பு, என்.எஸ்.பி ரோடு, பெரியக்கடை வீதி உள்ளிட்டவை களில் சாதாரண நாள்களிலேயே கூட்டம் களைகட்டும். பண்டிகை நாள்கள் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். சென்னையில் தி.நகர் போல    திருச்சியில் இந்தப் பகுதிகளில் திரும்பும் திசைகளிலெல்லாம் மக்கள் கூட்டமாகக் காட்சி யளிக்கும்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவரைத் தரிசிக்க வரு பவர்கள், அப்படியே கையோடு வீட்டுக்குத் தேவையான பொருள் களை வாங்கிச் செல்வதை சென்டிமென்டாக கருதுகிறார் கள். திருச்சி மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை எனப் பல மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வந்துபோகும் இடமாக இப்பகுதி விளங்குகிறது. இப்போது இந்த மாவட்டங்களில் உள்ளவர்களின் வீடுகளில் திருமணமோ, வேறு விழாக்களோ நடந்தால் ஜவுளி மற்றும் பாத்திரங்களோ வாங்க திருச்சிக்குத்தான் வருகிறார்கள்.  அந்தவகையில், திருச்சி சிங்காரத்தோப்புப் பகுதியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளும், என்.எஸ்.பி ரோட்டில் துணிக்கடைகள் மற்றும் பாத்திரக்கடைகளும் அதிகளவில் உள்ளன. இதே போல், பெரிய கடைவீதி பகுதி யில் வீட்டு உபயோகப்பொருள் கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடைகள் பெருமளவில் உள்ளன. இதுமட்டுமல்லாமல், திருச்சி டவுன்ஹால் பகுதிகளில் பூஜை சாமான்கள், இயற்கை மருந்துக் கடைகள் மற்றும் புத்தகக் கடைகள் நிறைந்து காணப்படுகின்றன.

திருச்சி பெரிய கம்மாளர் தெருவில் சமீபகாலமாக வட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களுக்கும், அதே அச்சு அசலான  இரண்டாம் ரகப் பொருள்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் வாசனைத் திரவியங்கள், அலங்காரப் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இதுமட்டுமல்லாமல், திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் உள்ள பகுதிகளில் கட்டுமானத்திற்குத் தேவையான பெயின்ட், ஹார்டுவேர்ஸ் மற்றும் பர்னிச்சர் கடைகள் அதிகளவில் உள்ளன.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்துதான், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் காய்கறி மற்றும் பழங்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் மற்றும் சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் போன்றவை தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் விளையும் பொருள்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கொண்டு வரப்படும் துவரை, அவரை, பாசிப் பருப்பு, கடலை, கொள்ளு, உளுந்து போன்ற பருப்பு வகைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் புளி, மிளகாய், மஞ்சள், வெல்லம், சின்னவெங்காயம் போன்ற பொருள்கள்  விற்பனை செய்யப்படுவதும் காந்தி மார்க்கெட் பகுதிகளில்தான். இந்த மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து மார்க்கெட் விரிவாக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழக அரசு, திருச்சி - மதுரை ரோட்டில் உள்ள கள்ளிக்குடியில் பிரமாண்டமான வணிக வளாகம் அமைத்துக் கொடுத்தது. அங்கு இடமாற்றம் செய்ய தற்போது மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து வருகின்றனர். 

திருச்சி ஜாபர்ஷா தெருவில், முன்பு திரும்பும் திசையெல்லாம் செயற்கை வைரக்கல் கடைகள் நிறைந்திருந்தன. ஆனால், சைனா டிசைன்களின் வருகையால் அந்தத் தொழில் நலிவடைந்து போனதால், செயற்கை வைரக்கல் வியாபாரிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறியுள்ளனர். ஸ்டேஷனரி பொருள்கள் அனைத்தும் அல்லிமால் தெருவில் கிடைக்கின்றன. 

நீங்கள் திருச்சிக்குச் சென்றால், அப்படியே மலைக்கோட்டை அருகிலுள்ள பஜார்களுக்கு ஒரு விசிட் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமானவற்றை அள்ளிச் செல்லாம்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்.

அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!

400-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள்!

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள ஓம் ஜுவல்லரியின் உரிமையாளர் கார்த்திக் பேசும்போது, “கடந்த 1976-ம் ஆண்டு எங்கள் கடை தொடங்கப்பட்டது. மூன்று தலைமுறைகளாக பிசினஸ் செய்துவரும் நாங்கள், ஆரம்பத்தில் வெள்ளி நகைகளில் மொத்த விற்பனை மட்டுமே செய்து வந்தோம். தற்போது ஏற்பட்டுள்ள தொழில் போட்டியின் காரணமாக சில்லறை விற்பனையையும் செய்து வருகின்றோம். வெள்ளி நகைகளில் A to Z பொருள்கள் எங்களிடம் உள்ளதாலும், பாரம்பர்ய மாக இருப்பதாலும் எங்களால் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க முடிகிறது. நாங்கள் கடை ஆரம்பிக்கும்போது ஒருசில கடைகளே இருந்தன. ஆனால், இப்போது இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. ஒரு காலத்தில் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் இருந்து திருச்சி பெரிய கம்மாளர் தெரு வுக்கு வேலைக்கு வந்தவர் கள், தற்போது தொழிலதிபர்களாக இருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் பகுதிகளில் தினமும் பல லட்சங்களில் வியாபாரம் நடந்து வருகிறது. திருச்சி பெரிய கடைவீதி மற்றும் என்.எஸ்.பி சாலைகளில் பொருள்கள் வாங்குவதை மக்கள் சென்டிமென்டாக நினைப்பது வியாபாரிகளுக்கு ப்ளஸ்” என்றார்.

அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை!

பிசினஸில் அப்டேட் அவசியம்!

வரதராஜு சில்க்ஸ் உரிமையாளர் சீனிவாசன் பேசும்போது, “கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் வணிகம் செய்து வருகின்றோம். சமீபகாலமாக திருச்சியில் பிசினஸ் அதிகரித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் இந்தப் பகுதியில் பெரிய பெரிய நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது. காரணம், திருச்சியில் வியாபாரமும், வணிக நுகர்வு கலாசாரமும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் பார்க்கிங் பிரச்னைகளும், இட நெருக்கடியும் உள்ளன.  என்னதான் பாரம்பர்யமான கடை என்றாலும் வாடிக்கையாளர்களின் எண்ணத்துக்கு ஏற்றவகையில் நாங்களும் அப்டேட் ஆக வேண்டியுள்ளது. சமீபகாலமாக ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்துள்ளதால், நாங்களும் அதற்கு இணையாக வளர வேண்டியுள்ளது” என்றார்.