
அங்காடித்தெரு! - 8 - கவர்ந்திழுக்கும் கரூர் ஜவஹர் பஜார்!
தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்று கரூர். கரூரின் வட எல்லையில் காவிரி ஓடினாலும், மாவட்டத்தின் 70% பகுதி வானம் பார்த்த மானாவாரி நிலம்தான். அதனால், மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு நடக்கும் பல்வேறு தொழில்களை நம்பியே இருக்கிறார்கள்.

இங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகும் வீட்டு உபயோகத் துணிகள், பஸ் பாடி கட்டும் தொழில், பாய் தயாரித்தல், கொசுவலை உற்பத்தி, முருங்கைக்காய் உற்பத்தி என்று பல தொழில்கள் வெற்றிகர மாக நடக்கின்றன.
கரூர் நகரத்தில் அனைத்து விதமான பொருள்களும் விற்பனை செய்யப்படும் பஜார் என்று கேட்டால், “அது நம்ம ஜவஹர் பஜார்தான்’’ என்று சொல்வார்கள். “வானத்துல போற ஏரோ பிளேன், தண்ணியில போற கப்பல், தண்ட வாளத்துல ஓடுற ரயிலு தவிர, மத்த எல்லா சாமான் செட்டும் ஜவஹர் பஜார்ல கிடைக்கும்ன்னு வேடிக்கையா சொல்வாங்க” என்று இந்த பஜார் பற்றி சுவாரஸ்ய மாகச் சொல்கிறார் இந்த பஜாரில் கடை நடத்திவரும் பெரியவர் ஒருவர்.
சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பே இந்த ஜவஹர் பஜார் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பகுதி அப்போது கரூர் நகரத்துடன் இணையவில்லை. மாரியம்மன் கோயில் அருகே உள்ள பகுதிகள்தான் கரூருடன் இருந்தது. இந்த பஜாரில் அப்போது நூறுக்கும் மேற்பட்ட மண்டிகள் தான் செயல்பட்டிருக்கின்றன. 1990-க்குப்பின் இந்த மண்டிகள் வேறிடத்துக்கு மாறிச் செல்ல, மாரியம்மன் கோயில் பகுதியில் இயங்கிவந்த நகைக்கடைகள், ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள், பாத்திரக் கடைகள், அரிசிக் கடைகள் என அனைத்துக் கடைகளும் ஜவஹர் பஜார் பகுதிக்கு மாறின. அன்று முதல் இன்று வரை ஜவஹர் பஜாரில் தினமும் ஜேஜே என்று கட்டுக் கடங்காத கூட்டம்தான்.
கரூர் மாவட்ட அனைத்து வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ராஜு, “கரூர் வழியாகத்தான் கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை போகுது. அதேபோல, தலா 70 கிலோ மீட்டர் தூரம் மேற்கே கோவையிலும், கிழக்கே திருச்சி யிலும் விமான நிலையங்கள் இருக்கின்றன. ஜவஹர் பஜாரில் இருந்து கூப்பிடு தொலைவில்தான் ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அதனால், கரூர் தொழில்நகரமாக மிளிர்கிறது.

அதேபோல், ஜவஹர் பஜாரில் கிடைக்காத பொருள்களே இல்லை. இங்கு 85 நகைக்கடைகள் இருக்கு. இருபதுக்கும் மேற்பட்ட பேக்கரிகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜவுளி, ரெடிமேட் கடைகள், 20 எலெக்ட்ரிக்கல்ஸ் கடைகள், பத்துக்கும் மேற்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், முப்பதுக்கும் மேற்பட்ட பாத்திரக் கடைகள், பாய்கள், கொசுவலை விற்பனை செய்யப்படும் கடைகள், 50 மெடிக்கல் ஷாப்புகள், 15 அரிசிக் கடைகள், இரும்பு மற்றும் பெயின்ட் விற்பனை செய்யப்படும் கடைகள்ன்னு இங்கு எல்லா வகையான பொருள்களையும் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
தவிர, 15-க்கும் மேற்பட்ட நாட்டுச்செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படும் கடைகள், கடந்த இரண்டு வருடங்களாகப் புதிதாக உருவாகி செயல்பட்டு வருகின்றன. பத்து பலசரக்கு கடைகளும் இருக்கின்றன. அதோடு, பொரி உற்பத்திக்கு கரூர் ஃபேமஸ். இங்கு 20 பொரி கடலை, பட்டாணி உற்பத்திக் கடைகள் இயங்கி வருகின்றன.

தவிர, ஜவஹர் பஜார் கிழக்கு முனையில் ஏகப்பட்ட பழக்கடைகள் இயங்கி வருகின்றன. அனைத்துப் பழங்களும் தரமாகவும், விலை குறைவாகவும் இங்கே விற்பனை செய்யப்படு கின்றன. வாட்ச் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்கள், பொம்மைக் கடைகள், வாசனைத் திரவியங்கள், விவசாயத்திற்குத் தேவையான கருவிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், செல்போன் விற்பனை செய்யும் கடை களும் இங்கு ஏராளம். ஒருநாளைக்கு ஜவஹர் பஜாரில் சுமார் ரூ.15 கோடி வரை வியாபாரம் ஆகிறது. கரூர் நகரம் விஸ்தாரமானதால், ஜவஹர் பஜாருக்கு நேர் மேற்கே உள்ள கோவை சாலையில் பைபாஸ் வரை இப்போது தமிழகத்தின் பெரிய நகைக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியும் ஜவஹர் பஜார் பார்ட்-2 வியாபார ஸ்தலமாக அவதாரம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது’’ என்றார்.
நகைக்கடைகள் உரிமையாளர் சங்கமான கரூர் ஷராப் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ரவீந்தரகுமார், “ஜவஹர் பஜார்ல நூறு வருடங்கள் நெருங்கும் அல்லது தாண்டிய ஐந்து கடைகள் இயங்கி வருகின்றன. அதுல ஒரு நகைக்கடை எங்களுடைய கே.பி.ஆர் ஜுவல்லரி. எங்க தாத்தா இந்தக் கடையை ஆரம்பிச்சு 97 வருஷம் ஆவுது. அதேபோல், இந்தப் பகுதியில் நூறு வருடங்கள் தாண்டிய பழனிமுருகன் ஜுவல்லரி, சக்தி ஜுவல்லரி, எம்.சி.ஆர்.எஸ் போன்ற ஜுவல்லரிகளும் உள்ளன. தவிர, 120 வருடங்கள் பழமையான ஆதிசக்கரபாணி என்கிற நாட்டு மருந்துக் கடையும் இங்கே இயங்கி வருது.
அதோடு, ஜவஹர் பஜாரில் ஆரிய வைஸ்ய சமூகத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு 101 வருடங் களை எட்டியுள்ள கரூர் வைஸ்யா வங்கியும், 91 வருடங்களைக் கடந்த லஷ்மி விலாஸ் வங்கியும் செயல்பட்டு வருது.
‘நல்ல காரியங்களுக்கு ஜவஹர் பஜாரில் பொருள் வாங்கினா, நடக்காத காரியங்கள்கூட நடக்கும்’ன்னு சொல்வாங்க. எல்லா பொருள்களும் இங்கு மலிவா கிடைப்பதுதான் ஹைலைட்” என்றார்.
கரூருக்குப் போகிறவர்கள் ஒருமுறை ஜவஹர் பஜாருக்குப் போய்ப் பாருங்களேன்!
துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்.

குறைவான விலை... தரமான பொருள்!
மகாலிங்கம், ஜெயம் ஜவுளிக் கடை உரிமையாளர்.
“கரூரில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வீட்டு உபயோகத் துணிகள் தயார் செய்யப்படுகின்றன. ஜவஹர் பஜாரில் 50 ஜவுளிக் கடைகள் இயங்குகின்றன. பெரிய கடைகள்ன்னு பார்த்தா, ஐந்து கடைகள் தேறும். அதுல ஒண்ணு எங்களின் ஜெயம் சில்க்ஸ். சூரத், மும்பை அகமதாபாத்ன்னு போய் நேரடியாகக் கொள்முதல் பண்ணிட்டு வந்து, இங்க விற்பனை செய்கிறோம். அதனால், இங்கு நாங்க மலிவா மக்களுக்கு ஜவுளியை விற்பனை செய்கிறோம். போர்வை, பெட்ஷீட், ஜன்னல் துணிகள், குஷன் துணிகள் இங்கு சல்லி ரேட்டில் கிடைக்கும். தவிர, முகூர்த்த பட்டுப்புடவைகள், மாப்பிள்ளைக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டைகளும் கிடைக்கும்.’’