அங்காடித்தெரு! - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..!

அங்காடித்தெரு! - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..!
நெல்லையின் அடையாளமாகத் திகழும் நெல்லையப்பர் கோயிலின் ரதவீதிகளில், தேரோட்டத்தின்போது பல லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத் துடன் கூடுவார்கள். அதே ரதவீதிகளில் தினந்தோறும் பொருள்களை வாங்கிச் செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். நெல்லையப்பர் கோயிலின் நான்கு ரதவீதிகளிலும் இருக்கும் கடைகளிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிவிட முடியும்!
நெல்லையைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் மக்கள் அனைவரும் பொருள்களை வாங்குவதற்கு வரக்கூடிய இடமாக இருப்பது நெல்லை டவுன்தான். ‘‘கிராமங்களிலிருந்து வந்து, ரத வீதிகளில் காலாற நடந்தபடியே பொருள்களை வாங்குவதில் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது. எங்களின் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தபின்னர், ரதவீதிகளில் உள்ள கடைகளில் எல்லாப் பொருள்களையும் வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்’’ என்று சிலாகிக்கிறார் மானூரைச் சேர்ந்த விவசாயி தங்கப் பாண்டியன்.

ரதவீதியின் கடைகள் அனைத்தும் காலை ஒன்பது மணிக்குத் திறந்துவிடுகின்றன. அம்மன் சன்னதி, ரதம் நிறுத்தும் இடம் என இந்தச் சாலையின் இரு பக்கத்திலும் பாத்திரக் கடைகள் நிறைந்து இருக்கின்றன. வீட்டு உபயோகத்துக்குத் தேவையான அனைத்து விதமான பாத்திரங்களையும் இங்கு வாங்கிவிட முடியும். பாரம்பர்யம் மிகுந்த செம்புப் பாத்திரக் கடைகள் அதிகம் இருப்பதும் இந்தப் பகுதியில்தான். திருமண சீஸன் காலங்களில் செம்பு அண்டா, தவலைப் பானை எனப் பலவற்றையும் மக்கள், தலையில் சுமந்து செல்வதைப் பார்க்கலாம். அத்துடன், சில்வர் பாத்திரக் கடைகள்,அலுமினியப் பாத்திரங்களும் இந்தப் பகுதியில் அதிகமாக விற்பனையாகின்றன. கவரிங் நகைகளுக்கான கடைகளும் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன.
இங்கு காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. வாழைக் குலைகளை விவசாயிகள் மொத்தமாகக் கொண்டுவந்து விற்பனை செய்ய வசதியாக கமிஷன் கடைகள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு நியாயமான விலை இந்த மார்க்கெட்டுகளில் கிடைப்பதால், அதிகாலையில் கிராமங்களிலிருந்து வரக்கூடிய பேருந்துகளில் காய்கனிகளுடன் விவசாயிகள், தங்களின் விளை பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். பகல் முழுவதும் பொதுமக்கள் இங்கு வந்து, வீட்டுக்குத் தேவையான காய்கனிகளை வாங்கிச் செல்கிறார்கள்.
தெற்கு ரதவீதியில் அதிகமான மருந்துக்் கடைகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் இருக்கும் சில மெடிக்கல் நிறுவனங்களின் கட்டடத்திலேயே பிரபலமான மருத்துவர்கள் வெளிநோயாளிகளைச் சந்திக்க வருவார்கள். இந்தப் பகுதியில் கைவினைப் பொருட்களின் விற்பனை மையங்களும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
கீழ ரதவீதியும் தெற்கு ரதவீதியும் சந்திக்கும் இடத்தில் வாகையடி முனை இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் இந்தப் பகுதியில் இருப்பதால், எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும்.
மேல ரதவீதியைப் பொறுத்தவரையிலும், நகைக் கடைகளுக்கான இடமாக உள்ளது. இந்த ரதவீதியில் மட்டும் அல்லாமல் கூலக்கடைபஜார் பகுதியிலும் நகைக்கடைகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் சின்னதும் பெரியதுமாக 250-க்கும் அதிகமான நகைக்கடைகள் இருக்கின்றன. நகைப்பட்டறைகளும் இதே பகுதியில் உள்ளன. மக்கள் விரும்பும் வடிவங்களில் நகைகளைச் செய்து கொடுக்கும் திறமையான நபர்கள் இப்போதும் இருப்பதால், மெஷின் கட்டிங் நகைகளைவிடவும் கையால் செய்யப்படும் நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு மூன்று கிராம் தங்க நகை முதல் வைர நெக்லஸ் வரை வாங்கிவிடலாம்.

இது பற்றிப் பேசிய திருநெல்வேலி தங்கம், வைரம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளரான விநாயகம், “இவை பாரம்பர்யமான கடைகள் என்பதால், ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்தக் கடைகளில் வந்து தங்க நகைகளைச் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மங்கல நாண் உள்ளிட்டவற்றை எப்போதுமே தங்களின் பாரம்ச்ர்யக் கடைகளில் மட்டுமே செய்துகொள்கிறார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன். டவுன் வடக்கு ரதவீதியிலேயே நெல்லையின் பாரம்பர்யம் மிகுந்த ஜவுளிக் கடைகள் இருக்கின்றன. ஆர்.எம்.கே.வி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களுக்கெனவே வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். உள்ளூரில் மட்டும் அல்லாமல் கேரளாவில் இருந்தும்கூட பலரும் இங்கு வந்து ஜவுளிகள் வாங்கிச் செல்கிறார்கள்.
நெல்லை வியாபாரிகள் சங்கத் தலைவரான எம்.ஆர்.சுப்பிரமணியனிடம் பேசியபோது, “இந்தப் பகுதியில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பிருந்தே கடைகள் இருந்திருக்கின்றன. இங்குள்ள வியாபாரிகள் சங்கத்தை, 1947-ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சீஸன் சமயங்களில் ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் நடக்கிறது’’ என்றார் உற்சாகத்துடன்.
திருப்பூரிலிருந்து பனியன் போன்ற பின்னலாடைகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். நெல்லையின் அடையாளமான ரதவீதிகளில் மளிகைப் பொருள்கள் முதல் ஜவுளி, நகைகள் என அனைத்தையும் குறைந்த விலைக்கு வாங்கி விட முடிகிறது.
‘நெல்லையப்பரை வழிபட்டது போலவுமாச்சு, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியது போலவுமாச்சு.. அதனால் நெல்லைக்குப் போயிட்டு வருவோம் வாங்க மச்சான்..’ என உறவினர்களை அழைத்துக் கொண்டு கிராமங்களிலிருந்து பஸ் ஏறி வருபவர்களுக்கு எப்போதுமே ஏமாற்றம் கிடைத்தது இல்லை!
- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இருட்டுக்கடை அல்வாவின் ரகசியம்!
நெல்லை என்றதும் நினைவுக்கு வரக்கூடிய இருட்டுக்கடை அல்வா விற்பனையாகும் கடை கிழக்கு ரதவீதியில் இருக்கிறது. நூற்றாண்டு கடந்த இந்தக் கடையின் சுவைக்கு ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். தினமும் சில நூறு கிலோ இருட்டுக்கடை அல்வா கடல் கடந்து விற்பனைக்காகச் செல்கிறது. நூறு வருடங்களுக்கு முன்பாக,, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணாசிங் என்பவரால் தொடங்கப்பட்ட இருட்டுக்கடை அவரது மகன் பிஜிலிசிங் காலத்துக்குப் பின்னர் தற்போது ஹரிசிங் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மூன்று தலைமுறைகளாக இந்தக் கடையின் அல்வா சுவை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் அதன் விற்பனை ரகசியம்!
இலக்கியத்துக்குப் பெயர்போன மேற்கு ரதவீதி!
மேற்கு ரதவீதி நகைகக்கடைகளுக்கு மட்டும் அல்லாமல் இலக்கியத்துக்கும் பெயர்பெற்றது. இலக்கிய விமர்சகரான தி.க.சி-யின் வீடு மேல ரதவீதியில் உள்ள சுடலைமாடன் தெருவில் இருக்கிறது. அவர் உயிருடன் இருந்த வரையிலும், வீட்டில் இருந்து நடந்துவந்து நம்பி டீக்கடையில் காபி குடித்து விட்டு பொன்னையாபிள்ளை புத்தகக் கடையில் அமர்ந்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, தேவையான இதழ்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இப்போதும்கூட இந்தப் பகுதியில் வண்ணதாசன் உள்ளிட்ட இலக்கியவாதிகள் வந்து செல்கிறார்கள்.