மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

‘நகரேஷு காஞ்சி’ எனக் காஞ்சிபுரத்தை அழைப்பார்கள். நகரங்களிலேயே சிறந்த நகரம் என்பது இதன் பொருள். திரும்பிய பக்கமெல்லாம் கோயில் என ஆன்மிகம் தழைத்தோங்கிய இந்த நகரம், பட்டுத் தொழிலுக்குப் பெயர்போனது.

காந்தி சாலை, காஞ்சிபுரத்தில் முக்கிய வணிக வீதி. பட்டு ஜவுளிக்கடைகள்தான் காந்தி சாலையில் பெருமளவில் ஆக்ரமித்து இருக்கின்றன. அதன் பக்கத்தில் உள்ள மேட்டுத் தெரு, நடுத்தெரு மற்றும் பிள்ளையார்பாளையம் போன்ற பகுதிகளிலும் பட்டு ஜவுளிக் கடைகள் நிறைந்தி ருக்கின்றன. காஞ்சிபுரத்தில் ரூ.1000-த்திலிருந்து ரூ.2 லட்சம் வரை பட்டுப் புடைவைகள் வாங்கலாம். விலைக்கேற்ற தரத்தில் பட்டுப் புடைவைகள் கிடைக்கும். காஞ்சிபுரத்தில் மட்டும் தினமும் சுமார் 5 - 7 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டுப் புடைவைகள் விற்பனையாகின்றன.

காந்தி சாலையில் உள்ள பட்டு விற்பனையாளர் தனசேகருடன் பேசினோம். “காஞ்சிபுரத்தில், காஞ்சிப் பட்டு மட்டுமில்லாமல் ஆரணி, தர்மாவரம், பனாரஸ், காட்டன் சில்க்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பட்டுப்புடைவைகளும் கிடைக்கின்றன. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பட்டுச் சேலை வாங்க, தினமும் காஞ்சிபுரம் வருகிறார்கள்.

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

பொதுவாக ஆடி மற்றும் மார்கழியில் வியாபாரம் டல்லாக இருக்கும். தமிழகத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சி களுக்கு மட்டும்தான் பட்டுப்புடைவை எடுக் கிறார்கள். ஆனால், கர்நாடகாவில் விழாக் காலங் களில் பட்டுப் புடைவை எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ளவர்கள் காஞ்சிபுரம் கோயில்களுக்கு வரும்போது பட்டுப்புடைவை வாங்காமல் செல்லமாட்டார்கள். பட்டு மட்டுமல்லாமல், கைத்தறிப் புடைவை, துண்டு உள்ளிட்டவைகளும் காஞ்சிபுரத்தில் அதிக அளவு விற்பனையாகும்.

காஞ்சிபுரத்தின் பிரதானத் தொழில் நெசவு என்றாலும் தற்போது நெசவு செய்ய ஆட்கள் இல்லை. மூலப்பொருள்களின் விலையும், கூலியும் அதிகமாகி விட்டது. 80% விசைத்தறி நெசவுதான் நடைபெறுகிறது. பெரிய கடைகளில்தான் நல்ல பட்டு கிடைக்கும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் சிறிய கடைகளில் பட்டு வியாபாரம் குறைந்துவிட்டது. வெளியூரி லிருந்து பட்டு வாங்க வருபவர்களை ஆட்டோக்காரர் கள் பேருந்து நிலையத்திலேயே மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட பட்டுக் கடையைக் கேட்டால், வேறு கடைகளுக்கு அழைத்துச்  சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு 10-15% வரை கமிஷன் கிடைக்கிறது. இதனால்  போலிப் பட்டு வியாபாரம் அதிகமாகிவிட்டது’’ என்றார் வருத்தத்தத்துடன்.

காந்தி ரோட்டுக்குப் பின்பக்கத் திலேயே இருக்கிறது ராஜாஜி மார்க்கெட். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மார்க்கெட்தான் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் காய்கறி மற்றும் மளிகைப் பொருள் களின் தேவையைப் பூர்த்தி செய் கிறது. நூறு ஆண்டுகளைக் கடந்த மார்க்கெட் என்ற பெருமையோடு இன்றும் சுற்றுவட்டாரக் கிராமங் களின் காய்கறி, மளிகை போன்ற உணவுப் பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

மளிகை வியாபாரத்தில் பிஸியாக இருந்த வேதாச்சலம் என்பவரிடம் பேசினோம். “எனக்கு 99 வயசு ஆகுது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த மார்க்கெட் இருக்கிறது. 1907-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் டான்ஸ் யோஸ்க் என்பவர்தான் இந்த மார்க்கெட்டைத் திறந்து வைத்தார். இதனால் டான்ஸ் மார்க்கெட்ன்னு பெயர். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைஞ்சப்ப 1937-ல் ராஜாஜி மார்க்கெட்னு பெயர் மாத்தினாங்க. சுற்றியுள்ள 50 கிலோ மீட்டரில் உள்ள கிராமங்களில் இருந்து ஜனங்க மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொண்டு போவாங்க. ஆரம்பத்துல நூறு கடைகள்தான் இருந்தது. இப்ப 600-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இருக்கு’’ என்றார்.

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

காய்கறி வியாபாரம் செய்துவரும் ரவிக் குமாரிடம் பேசினோம். “நாங்க மூன்று தலை முறையா காய்கறி வியாபாரம் செய்துவருகிறோம். காஞ்சிபுரம் மார்க்கெட்டுக்கு 90 சதவிகித காய் கறிகள் கோயம்பேட்டிலிருந்துதான் வருகின்றன. உருளை, வெங்காயம் உள்ளிட்டவை மகாராஷ்ட்ராவிலிருந்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் உத்திரமேரூர், படப்பை, வாலாஜாபாத் போன்ற சுற்றுவட்டார மக்கள் இங்குவந்து காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற காய்கறி மார்க்கெட்டுகளுக்கும் இங்கிருந்துதான் காய்கறி களை அனுப்பி வைத்தோம்.

இப்ப லாரிகள் நிறுத்தும் இடத்தில் கோயில் கட்டிட்டாங்க. இதனால லாரிகள் வந்து போறதுக்கு சிரமமா இருக்கு. கோயம்பேடு மார்க்கெட் வந்தபின்னாடி காய்கறி வியாபாரம் குறைஞ்சுடுச்சு. வீட்டு விஷேசங்களுக்கு நேரடியாக கோயம்பேடு சென்று அங்கேயே காய்கறி வாங்கிக்கிறாங்க. தினமும் காய்கறி வாங்குறவங்க ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ல கூறுகட்டி விற்கும் காய்கறிகளை வாங்கிக்கிறாங்க. 

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களான ஐயம்பேட்டை, குருவிமலை, தூசி, கதிர்பூர், பாலு செட்டி பரந்தூர் போன்ற இடங்களில், சுமார் பத்து வாரச் சந்தைகள் செயல்படுது. இதனால அந்தப் பகுதியில் உள்ளவங்க, அங்கேயே காய்கறி வாங்கிக்கிறாங்க. இதனால வியாபாரமும் குறைஞ்சுடுச்சு. இந்த மார்க்கெட் மிகவும் பழைமையானது. போதிய வசதிகள் இல்ல; நெருக்கமாகவும் இருக்கு.  இதனால் மார்க்கெட்டின் வசதியை மேம்படுத்தணும்னு கேக்குறோம். இதைச் சிலபேர் எதிர்க்கிறாங்க. இதனால மாற்றத்துக்கு வழியில்லாம இருக்கு’’ என்றார்.  

காஞ்சிபுரம், காலவோட்டத்துக்கேற்ப பல மாற்றங்களைக் கண்டு வருகிறது என்பது மட்டும் இந்த நகரத்தை ஒருமுறை சுற்றி வந்தபோது தெளிவாகத் தெரிந்தது.

-பா.ஜெயவேல்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

கண்ணைக் கவரும் கடவுள் பொம்மைகள்!

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்குத் தெற்குப் பகுதியில் இருக்கிறது அஸ்தகிரி தெரு. பொம்மைகாரத் தெரு என்று கேட்டால் எளிதாகச் சொல்லி விடுவார்கள். இங்கு பொம்மை உற்பத்தி செய்துவரும் பூங்கொடியுடன்  பேசினோம். “கொலு பொம்மைகள், அலங்கார பொம்மைகள், விநாயகர் பொம்மைகள் என விதவிதமான பொம்மைகள் இங்கு கிடைக்கும்.

அங்காடித்தெரு! - 11 - ஜொலிக்கும் காஞ்சி!

சிலைகளில் உள்ள கலைநுட்பத்தைவிட இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் கலைநுட்ப மானதாக இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி இருக்கின்றன. இங்குள்ளவர்கள் கடவுள் பொம்மைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறார்கள். திருமணம், குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கு அதற்கேற்ப கடவுளின் பொம்மைகளை வாங்கிச் செல்கிறார்கள். உதாரணமாக, பெருமாள் என்றால், திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் பொம்மைகள் இங்கு கிடைக்கும். அந்தக் கோயிலில் சுவாமி எப்படி இருப்பாரோ, அதேபோல் தத்ரூபமாக செய்து கொடுக்கிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொம்மைகள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி ஆகிய சீஸனில் அதிக அளவு வியாபாரம் இருக்கும்” என்றார்.