மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

‘திண்டுக்கல் மெயின் ரோடு’ என அழைக்கப்படும் சாலைதான் திண்டுக்கல் நகரின் அங்காடித் தெரு. பேருந்து நிலையம் முதல் மலைக்கோட்டை நுழைவாயில் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு கிடக்கும் இந்தச் சாலையில், நமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிவிடலாம். இந்தச் சாலையில் சிறுசிறு கிளைகளாகப் பிரிகின்றன ரதவீதிகள். கிட்டத்தட்ட மனிதனின் முதுகெலும்பைப் போல, நகரின் மத்தியில் ஊடாடிக் கிடக்கிறது மெயின் ரோடு.

திண்டுக்கல் நகரின் வியாபாரம், இந்த நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை நம்பியே இருக்கிறது. கிராமத்தினரின் தேவை, நகர மக்களின் தேவைகள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைப்பது கூடுதல் சிறப்பு. சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்து, பேருந்து நிலையத்தில் இறங்கி, மெயின் ரோடு வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்து,  வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் மக்கள்.

பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளை விநாயகர் கோவில் வரை மொபைல் கடைகளும், பாத்திரக் கடைகளும் இருக்கின்றன. வெள்ளை விநாயகர் கோவிலைத் தாண்டினால், சாலையின் இரண்டு பக்கமும் அணிவகுத்து நிற்கின்றன துணிக்கடைகள். இந்தப் பகுதியில் பல சின்னச் சின்ன சந்துகள் இருக்கின்றன. அவற்றிலும் துணி வியாபாரம் நடக்கிறது. இன்னமும் பாயில் அமர்ந்து துணிகளைத் தேர்வு செய்யும் இந்தக் கடைகளுக்கு, நிரந்தரமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

“ஒரு காலத்துல கடைக்கு வர்ற வாடிக்கையாளர்கள் இது நம்ம கடைன்னு உரிமையோட வருவாங்க. வீட்டு விஷேத்துக்கு மறக்காம கூப்பிடுவாங்க. பாயில உக்காந்து, வேண்டிய துணிகளைப் பொறுமையாத் தேர்வு பண்ணி வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, இப்ப அப்படி வர்ற வாடிக்கையாளர்கள் ரொம்பவும் குறைஞ்சிட்டாங்க. ரெடிமேட், பிராண்ட் துணிகளைப் பயன்படுத்துறவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டதால எங்களை மாதிரியான சின்னச் சின்ன ஜவுளிக் கடைகள்ல முன்னமாதிரி வியாபாரம் நடக்குறதில்லை” என ஆதங்கத்துடன் சூழ்நிலையைப் பகிர்ந்துகொள்கிறார் ஜவுளிக் கடை உரிமையாளர் செளந்தரராஜன்.

திண்டுக்கல் வெற்றிலைக்குத் தனிச்சிறப்பு உண்டு. அபிராமி அம்மன் கோவில் பகுதிகளில் வெற்றிலை வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. அதையடுத்து, பாத்திரக் கடைகளும் நகைக் கடைகளும் வரிசை கட்டுகின்றன. முன்னணி நிறுவனங்களின் நகைக் கடைகள் திண்டுக்கல்லில் இருந்தாலும், இந்தப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக இருக்கும் சின்னச் சின்ன நகைக் கடைகளிலும் வியாபாரம் நன்றாக நடக்கிறது. கிராமத்து மக்களே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்கள் பிராண்ட் பார்ப்பதில்லை. நம்பிக்கையை மட்டுமே பார்க்கிறார்கள்.

நகைக் கடைகள் முடிவதற்குச் சற்று முன்பாக, மெயின் ரோட்டிலிருந்து பிரிகிறது பெரிய கடை வீதி. சின்ன குண்டூசி முதல் மளிகை, விவசாயத் தேவைக்கான பொருள்கள் வரை இங்கு வாங்கலாம். சில்லறை விற்பனை முதல் மொத்த வியாபாரம் வரை இங்கு ஜோராக நடக்கிறது வியாபாரம்.

மெயின் ரோடு முடியும் இடத்தில் இருக்கிறது காய்கறி மார்க்கெட். இங்கு மொத்த விலைக்கே சில்லறையிலும் காய்கறிகள் கிடைக்கின்றன.

திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்கத் தலைவரான கிருபாகரன், “திண்டுக்கல்ல இப்ப அரிசி வியாபாரம் நல்லாப் போகுது. தமிழகத்துலயே சின்ன வெங்காயத்துக்கு எனத் தனியா ஒரு மார்க்கெட் இங்கதான் இருக்கு. மெயின் ரோடும் அதை ஒட்டியிருக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு ரதவீதி, பெரிய கடைவீதிகள்தான் திண்டுக்கல்லோட முக்கியமான வியாபாரப் பகுதிகள். சுற்றுப்பகுதிகள்ல இருந்து வர்ற கிராம மக்கள்தான் முக்கியமான வாடிக்கையாளர்கள்.

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

திண்டுக்கல்லுக்குப் பேர்போன பூட்டுத்தொழில் இப்ப நலிவடைஞ்சி இருக்கு. பெரிய கம்பெனிகள், அலிகார் பூட்டுகள் சந்தையில தாராளமா கிடைக்கிறதால, திண்டுக்கல் பூட்டுத்தொழில் நலிவடைஞ்சிட்டு வருது.

திண்டுக்கல்ல நல்ல நுகர்வோர்கள் இருக்காங்க. அதனாலதான் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் இங்க வந்து அவங்க கிளைகளை ஆரம்பிச்சிருக்காங்க. அது, உள்ளூர் வியாபாரிகளுக்குக் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. இருந்தாலும், அதையும் தாண்டி உள்ளூர் வியாபாரிகளும் நிற்கிறாங்கன்னா, வாடிக்கை யாளர்கிட்ட அவங்க ஏற்படுத்தியிருக்கிற நம்பிக்கையே காரணம். ஒரு காலத்துல பல பொருள்களுக்கு மதுரைக்குத்தான் போகவேண்டியிருக்கும். ஆனா, இப்ப திண்டுக்கல்ல எல்லாமே கிடைக்குது” என்றார்.

“பூட்டு, புகையிலைத் தொழில்கள் திண்டுக்கல்லோட அடையாளமா இருந்தது. ஆனா, அந்தத் தொழில்கள் அழிஞ்சிட்டு இருக்கு.

ஜி.எஸ்.டி வந்தபிறகு பல சிறுதொழில்கள் அழிஞ்சிப்போச்சி. பொதுவா, பத்து வருஷத்துக்குமுன்ன இருந்ததைவிட இப்ப வியாபாரம் பல மடங்கு அதிகரிச்சு இருக்கு. எங்க அமைப்புல 3,500 உறுப்பினர்கள் இருக்காங்க. இப்ப மாநகராட்சி புதுசு புதுசா வரி போடுறதால திரும்பவும் தொழில்கள் பாதிக்கப்படுற நிலை உருவாகிட்டு இருக்கு. அரசாங்கம் இதுல தலையிட்டுத் தொழில்களைக் காப்பாத்தணும்” என்றார் திண்டுக்கல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலாளர், மேடா பாலன்.

திண்டுக்கல் மெயின் ரோட்டில்ல நன்னாரி சர்பத் சாப்பிட்டுவிட்டு நமக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருவது அலாதியான அனுபவம். திண்டுக்கல் நகரம், பூட்டைப் போலவே, பிரியாணிக்கும் பெயர்பெற்றது. நகரில் சிறியதும், பெரியதுமான நூற்றுக்கணக்கான பிரியாணிக் கடைகள் இருக்கின்றன. திண்டுக்கல் மக்கள், உணவுக்கு முக்கியத்துவம் தருவார்கள். முன்னணி பிரியாணிக் கடைகள் மட்டும் இல்லாமல், அனைத்து பிரியாணிக் கடைகளிலும் விற்பனை களைகட்டுகிறது.

பிரியாணிக்கு அடுத்து, வகைதொகையில்லாமல் அனைத்து இடங் களிலும் பரவிக் கிடக்கின்றன டீக்கடைகள். அதிகாலை நான்கு மணிக்கே ஆயிரக்கணக்கான வடைகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. திண்டுக்கல்லில் டீக்கடை வைத்தால், வருமானத்துக்கு உத்தரவாதம் நிச்சயம். வித்தியாசமான ஊர்தான் திண்டுக்கல்!

- ஆர்.குமரேசன்


படங்கள் : வீ.சிவக்குமார்

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

ஃப்ளிப்கார்ட் காட்டில் முதலீட்டு   மழை!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத் தின் நிறுவனர்களான பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஏக குஷியில் இருக்கிறார்கள்.காரணம், கடந்த 2017-ல் சீனாவின் டென்சென்ட்  நிறுவனத்தி டமிருந்து 1,400 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,100 கோடி) டாலர் முதலீடு பெற்றதுதான். டென்சென்ட்  நிறுவனம் ஓலாவில் 1,500 மில்லியன் டாலருக்கு முதலீடு செய்துள்ளது. ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் பேடிஎம், ஜோமோடோ ஆகிய நிறுவனங்களில் 400 மில்லியன் டாலர் முத லீடு செய்துள்ளது.

ஆக, சீன கம்பெனி களின் ஆதரவினால்தான் இன்றைக்கு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செழித்து வளர்ந்து வருகின்றன.

அங்காடித்தெரு! - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு!

புரூடென்ஷியல்  நிறுவனத்துடன் கைகோக்கும் பிரேம்ஜி!

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி, இன்ஷூரன்ஸ் நிறுவனத் தில் தனது முதலீட்டைப் பெருமளவில் இறக்கிவிட முடிவு செய்திருக்கிறார். ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தில் குறிப்பிடத்தகுந்த அளவு பங்குகளை வாங்கு வதற்காக, அமெரிக்காவின் புரூடென்ஷியல் நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறார்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறை, ரூ.50 ஆயிரம் கோடிகள் புரளும் துறையாக மாறும் என்ப தாலும், இந்தத் துறையில் ஸ்டார் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்துக்கு நல்ல மதிப்பு இருப்ப தாலும் இந்த முதலீட்டைச் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் அசீம் பிரேம்ஜி.