மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!

புதுச்சேரியில் வர்த்தகங்களை தன்னுள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் வீதிகள் நேரு வீதி, காந்தி வீதி, ரங்கப்பிள்ளை வீதி போன்றவைதான். இதில் பிரதான வீதியாகத் திகழ்வது நேரு வீதி மட்டுமே. கடந்த சில நூற்றாண்டுகளாகத் திறந்தவெளி சந்தையாக விளங்கிய இடம்தான் தற்போது நேரு வீதி மற்றும் காந்தி வீதி சந்திப்பில் அமைந்திருக்கும் பெரிய மார்க்கெட் என்றழைக்கப்படும் ‘குபேர் அங்காடி’யாகத் திகழ்கிறது. இந்த  அங்காடியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை நுகர்வுப் பொருள் விற்பனை அங்காடிகள் உள்ளன. காய்கறி, மளிகைப் பொருள்கள், துணிவகைகள், வீட்டு உபயோகப் பாத்திரங்கள் என நான்கு பிரிவு களாக வெகுவிமரிசையாக இயங்கி வருகின்றன. இங்கு குண்டூசி முதல் குக்கர் வரையிலான அனைத்துப் பொருள்களையும் இங்கே வாங்கிவிடலாம். 

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!

சுமார் 80-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் இங்கிருக்கின்றன. குழந்தைகளுக்கான சீருடைகள், நவநாகரிக உடை வகைகள், பெண்களுக்கான பாரம்பர்ய உடைகள், பட்டுப் புடவைகள், சினிமா பாணியிலான அலங்கார உடைப் பிரிவுகள் மற்றும் ஆடவருக்கான அனைத்து வகை உடைகளும் இங்கு கிடைக்கின்றன.

குபேர் மார்க்கெட்டை ஒட்டி யிருக்கும் ரங்கப்பிள்ளை வீதியில் அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கலாம். கொசக்கடை வீதி மற்றும் நெல்லுமண்டிச் சந்துப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 300 நகைக் கடைகள் இயங்குகின்றன. இங்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள், தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினங்கலான ஆபரணங்களை வாங்கிவிடலாம்.

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!


தியாகு முதலியார் வீதியில் வீடு மற்றும் பெரிய உணவகங்களுக்குத் தேவையான எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்களை வாங்கலாம். மேலும், திருமண சீர் வரிசைக்கான பொருள்கள் அனைத்தையும் இந்த ஒரே வீதியில் அள்ளிச் செல்லலாம்.

அதேபோல, எம்.ஜி ரோடு என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி வீதியில் அனைத்துவிதமான செருப்பு, ஷு வகைகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங் களை மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் வாங்கலாம்.

புதுச்சேரியில் அங்காடித் தெருக்கள் பல இருந்தாலும், நேரு வீதிதான் எல்லோரும் தேடிவரும் வர்த்தக கேந்திரமாக இருக்கிறது. புதுச்சேரியின் பிரதான வர்த்தக வீதியான இதில் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்குகின்றன. இங்கு துணிக்கடைகளே அதிக அளவில் அங்கம் வகித்தாலும், தோல் பொருள்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள், கலைப்பொருள்கள், புராதனப் பொருள்கள், உணவு மற்றும் இனிப்பு வகைகளும் இங்கு கிடைக்கிறது. அதேபோல, எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கான கடைகளுக்கும் பஞ்சமில்லை.

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!

“புதுச்சேரியில் பெரிய மார்க்கெட்டை ஒட்டியிருந்த நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிதான் வர்த்தக வீதிகளாக இருந்தன. அதன் பிறகான மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர விரிவாக்கம் போன்ற காரணங்களால் மகாத்மா காந்தி வீதி, கொசக்கடை வீதி, அண்ணாசாலை, செட்டி வீதி என நகரம் முழுவதும் வணிகக் கடைகள் அதிகரித்துவிட்டன. ஆனாலும் நேரு வீதிக்கான கவர்ச்சி இப்போதும் இருக்கிறது. நகருக்கு வெளியே சில பெரிய துணிக்கடைகள் வந்துவிட்டாலும் நேரு வீதிக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்வதை மக்கள் விரும்பவே செய்கிறார்கள்.

பிரெஞ்சு ஆளுநராக இருந்த ஜோசப் பிரான்சுவா துய்ப்ளே (Joseph Francois Duplex) இந்த வீதியில் தற்போதிருக்கும் இந்தியன் காபி ஹவுஸுக்கு எதிரில் இருந்த விடுதியில்தான் தங்கியிருந்தார். அதனால் இந்த வீதி ‘ஜோசப் பிரான்சுவா துய்ப்ளே வீதி’ என்றுதான் அழைக்கப்பட்டது. 1980-க்குப் பிறகுதான் நேரு வீதி எனப் பெயர் மாற்றம் பெற்றது. வெளிநாட்டில் இருந்து கப்பலில் பொருள்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப் பட்டதால், அண்டை மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து நம்பிக்கையோடு பொருள்களை வாங்கிச் செல்வார்கள் மக்கள்.

ஆனால், தற்போது ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்ததில் இருந்து புதுச்சேரிக் கான கவர்ச்சி போய்விட்டது. வணிகர்களை ஊக்கப்படுத்தி வணிகத்தைப் பெருக்குவதற்கான எந்தத் தொலைநோக்குத் திட்டமும் அரசுக்கு இல்லை. அந்தக் காலத்தில் வணிகர்கள்தான் மேலை நாடுகளுக் கான கலாசார தூதுவர்களாக இருந்தார்கள். ஆனால், தற்போதிருக்கும் எந்த அரசும் வணிகர்களைக் கண்டு கொள்ளாததால் வணிகமும் பெரிதாக வளர்வதில்லை” என்றார் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலு.

- ஜெ.முருகன்

படங்கள் : அ.குருஸ்தனம்

அங்காடித்தெரு! - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி!

சகலமும் கிடைக்கும் சண்டே மார்க்கெட்!

புதுச்சேரியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று சண்டே மார்க்கெட். சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் இந்தச் சந்தை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே இயங்கும். 1974-ம் ஆண்டு எண்ணிக்கையில் 40 கடைகளுடன் தொடங்கிய இந்தச் சந்தை தற்போது 1,500 கடைகளாக விருத்தியடைந்து பிரபலமாக இயங்கிவருகிறது.

புதுச்சேரி மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், சென்னை, திருச்சி, திண்டிவனம், பெங்களூரு என அனைத்துப் பகுதி களிலிருந்து வியாபாரிகள் சண்டே மார்க்கெட்டில் கடைகள் வைக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து இரவு 11 மணி வரை சண்டே மார்க்கெட் களைகட்டும். பெண் களுக்கான நாகரிக உடை வகைகள், அழகு சாதனப் பொருள்கள் இங்கு மிக மிகக் குறைவான விலையில் கிடைப்பதால், காலை முதல் மாலை வரை இங்குப் பெண்களின் கூட்டம் அலைமோதும்.

500 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போனும், 50 ரூபாய்க்கு  ஐபோனுக்கான சார்ஜரும் இங்கு கிடைக்கும். அனைத்து நாட்டின் தபால்தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இங்கு கொட்டிக்கிடக்கும் என்பதால், அவற்றைச் சேகரிப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். 200 முதல் 500 வருடங்கள் பழைமையான பொருள்கள்கூட இங்கே சர்வசாதாரணமாகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால், வெளிநாட்டவரும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்த வீதியில் நடந்துகொண்டிருப்பார்கள். புராதனப் பொருள்கள், அந்தக் காலத்து கேமராக்கள், 200 வருடம் பழைமையான பைனாகுலர் போன்றவற்றைச் சர்வசாதாரணமாக விலைபேசி வாங்கிச் செல்லலாம். மிகவும் பழைமையான புத்தகங்கள், மருத்துவ, பொறியியல் புத்தகங்களைப் பாதிவிலைக்கு வாங்கலாம். பிராண்டட் சட்டைகளைக்கூட ரூ.200-300-க்கு  இங்கு வாங்கிச் செல்லலாம்.