மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெண்ணும் ஆணும் ஒண்ணு!

பெண்ணும் ஆணும் ஒண்ணு!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்ணும் ஆணும் ஒண்ணு!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

‘`ஆண் - பெண் சமம் என்று சொல்லும்போதுகூட, பால் பேதம் பார்த்து சமன்செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பெண்ணும் ஆணும் ஒண்ணு என்று சொல்வோமே’’ என்கிறார், சேலத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் வேள்பாரி.  

பெண்ணும் ஆணும் ஒண்ணு!

ஆண்களின் தவறுகளுக்கான கேடயமா பெண்?!

‘`ஓர் ஆண் குழந்தை பிரச்னைகளுடன் வளர்ந்து நின்றால், அதை எண்ணி எண்ணி மறுகுவது தாயே. தந்தையின் உள்ளத்தில் அது குற்ற உணர்வை ஏற்படுத்துவதில்லை. அதேபோல, அந்த ஆண் செய்யும் அத்தனை தவறுகளிலிருந்தும் அவனைத் தாங்கும் கேடயமாக, அம்மா, சகோதரி, மனைவி எனப் பெண்களே அவனுடன் வெவ்வேறு உறவுகளாகத் தொடர்கின்றனர். குடும்பம், சமூகத்தில் ஆண்களுக்கான இடிதாங்கியாக இப்படிப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் ஒருபக்கம்; அதற்கான எந்தப் பதில் நன்றியும் மரியாதையும் இன்றி அடிமைகளாக அவர்கள் நடத்தப்படும்விதம் ஒருபக்கம். இவற்றையெல்லாம் பார்த்து வளரும் ஒவ்வோர் ஆண் குழந்தைக்குள்ளும், ‘அவள் எனக்குக் கீழானவள்தான்’ என்ற உணர்வு ஊற ஆரம்பிக்கிறது. இவையெல்லாம் மாற வேண்டும் என்ற பொறுப்பே, நம்மை அதைப்பற்றித் தொடர்ந்து பேசவும், எழுதவும் வைக்கிறது.

அப்பாக்களின் பொறுப்பே அதிகம்

ஆண், பெண் இருவருக்கும் உயிரின் மதிப்பில் எந்த வேறுபாடும் இல்லை. உடலில், அவரவர் பாலினத்துக்கு ஏற்ற தகவமைப்புகளைக்கொண்டிருக்கிறோம். இருவரும் பிறந்ததன் நோக்கம் ஒன்றுதான் என்ற புரிந்துணர்வுடன் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு முதன்மையானது. என் அம்மாவை என் அப்பா நடத்திய விதம்தான், எங்களுக்கு அம்மாவின் மீதான மரியாதையைக் கூட்டியது. ஆண் குழந்தைகளுக்கு அம்மாவிடம் கூடுதல் பிணைப்பு இருக்கும். பெண்ணின் மதிப்பை ஆண் குழந்தைகளுக்கு உணர்த்துவதில் அப்பாக்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர் என்பதை என் வீட்டிலிருந்தே நான் தெரிந்துகொண்டேன்.

‘அவ’ என்று அம்மாவை என் அப்பா எந்தச் சூழலிலும் சொன்னதில்லை. ‘அவங்க’ என்றே குறிப்பிடுவார். அம்மாவின் வேலைகளை இழிவாகவோ, கேலியாகவோ பேசியதில்லை. அம்மாவுக்கு எல்லா இடங்களிலும் சபைகளிலும் தனக்கு இணையான மரியாதையைக் கொடுத்தார், மற்றவர்களையும் கொடுக்கவைத்தார். வீட்டில் மின்சாரம் இல்லாத பொழுதுகளில், அப்பா எங்களுக்குச் சொல்லும் வாழ்க்கைக் கதைகளெல்லாம் அம்மாவின் பெருமைகள் பற்றியதே. நானும் அக்காவும் பள்ளிக்குக் கிளம்பும்போது, அவரவர் கைகளில் 20 பைசா கொடுப்பார். அவரவருக்கான உரிமை, சலுகை அனைத்தும் எந்த வேறுபாடுமின்றிக் கிடைத்தது. ஆண், பெண் ஒன்று என எனக்கு உணர்த்திய முதல் மனிதர் என் அப்பா. ஒவ்வோர் அப்பாவும் அப்படியிருக்க வேண்டியது, நாளைய நல் உலகுக்கான அத்தியவசியம்.

மாற்றம் பெற்றோரிடமிருந்து தொடங்க வேண்டும்

இன்றைய பெற்றோர் ஆண் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம்செலுத்த வேண்டியது, குழந்தைகளிடம் அல்ல... தங்களிடம்தான். அவர்களுக்கான ரோல்மாடலாகப் பெற்றோர் தங்களையே மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்...

*அம்மா, மனைவி, தங்கை என்று தங்கள் வீட்டுப் பெண்களை அந்த ஆண்கள் மரியாதைக்குரிய மனுஷிகளாக மதிக்க வேண்டும், நடத்த வேண்டும். உண்பதில், உடுத்துவதில், அன்பு செய்வதில் என அடிப்படை விஷயங்களில் பால்பேதம் கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*வீட்டில் உள்ள வேலைகளை ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் சமமாகப் பிரித்துக்கொடுக்க வேண்டும். தோட்டப் பராமரிப்பு முதல் வீட்டுப் பராமரிப்பு, சமையலறை வரை இது செயல்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, துவைத்த துணிகளில் அவரவருடைய துணிகளை அவரவர்களிடம் பிரித்துக்கொடுத்து மடிக்கச் சொல்லிப் பழக்கப்படுத்த வேண்டும். வீட்டிலுள்ள வேலைகள் பெண்ணுக்கு, வெளிவேலைகள் ஆணுக்கு என்ற வழக்கத்தை ஒழிக்க வேண்டும். இருவரும் இரண்டிலும் பங்கு பெறட்டும். பாலின அடிப்படையிலான கூடுதல் சலுகைகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் அத்தனை பொறுப்புகளையும் மனைவியின் தோள்களில் சுமத்திவிட்டு அலுவலக வேலைகளில்  ஈடுபடும் ஆண்கள், இனி தங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

*வீட்டில் நடக்கும் சாதாரணமான உரையாடல்களில்கூடப் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் வேண்டாம். உறவுகள், சுற்றங்களில் உள்ள உதாரணப் பெண்களை ஆண் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைப்பது... வீட்டுப் பெண்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நாள்களைக் கொண்டாடுவது... அவர்களின் வெற்றிகளைப் போற்றுவது... புதிய முயற்சிகளுக்குப் பாராட்டுவது என, ஆண் குழந்தை பெண்ணைக் கொண்டாடப் பழக்கப்படுத்த வேண்டும்.

*ஓர் ஆண் குழந்தை சந்திக்கும் முதல் பெண், தன் அம்மா. அவள் குழந்தையின் மகிழ்ச்சிக்காகத் தனது வலிகளை வெளிக்காட்டாமல் அவனை வளர்க்கிறாள்.  இதுவும் ஆண் குழந்தைகள் பெண்ணின் வலிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் போவதற்குக்  காரணமாகிறது. ‘தலை ரொம்ப வலிக்குது’ என்று சொல்வதுபோல, மாதவிடாய் நாள்களில் பெண்ணுக்கு உண்டாகும் வலி, சோர்வை மூடிமறைக்காமல் அதையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தலாம். ஆண் குழந்தைகள், ஆண்கள் உட்பட வீட்டில் அனைவரும் அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளைச் செய்து ஓய்வு கொடுக்கலாம். தாய்மை முதல் முதுமை வரை பெண்ணுடல் கடக்கும் சிரமங்களை, பாட்டி, அம்மா, அக்கா என வீட்டு மனுஷிகள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக ஆண் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

*ஆண் பெண்ணுக்கான உளவியல் என்பது வேறு வேறு. ஆண் விளைவு சார்ந்து எந்த விஷயத்தையும் அணுகுவான். பெண் எதையும் முறைப்படி செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பாள். பிரச்னை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற பார்வை ஆணுடையது. அடுத்து வரும் பிரச்னைகளை முன்கூட்டியே கணிப்பதும், ஒருவேளை பிரச்னை வந்தால் உணர்வுபூர்வமாக அணுகுவதும் பெண்ணியல்பு. இதுபோன்ற பெண் இயல்புகளை ஆண் குழந்தை தாழ்வாகப் பேசாமல் புரிந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பெண்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அந்த முக்கியத்துவமே, பெண்களை மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

*பெண்ணுக்குள்ளும் ஆண் உண்டு; ஆணுக்குள்ளும் பெண் உண்டு. மனித இனத்தில் ஆண் பெண் எனப் படைக்கப்பட்டதன் நோக்கம் ஒருவரை மற்றவர் அடிமைப்படுத்துவதற்கு அல்ல, ஒருவரோடு ஒருவர் இணக்கமான, அன்பான வாழ்க்கையைக் கொண்டாடுவதன் வழியாக அடுத்த தலைமுறையை உருவாக்கவே. வாழ்க்கை கொண்டாட்டமாக மாறும்போது பால் பேதங்களைத் தவிர்க்க முடியும்.''