
ஆர்க்கிடெக்ட் சரோஜினி திருடீ கிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா - ஓவியம்: ரமணன்
நம் அழகை மேம்படுத்திக்கொள்ள உதவும் ஓரிடம் நம் வீட்டிலுள்ள டிரஸ்ஸிங் டேபிள். நமக்கு உதவும் அந்த இடத்தை அழகாக வைத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை; களேபரமாகப் போட்டு வைப்பதையாவது தவிர்க்கலா மில்லையா? டிரஸ்ஸிங் டேபிளுக்கு மட்டும் பேசத்தெரிந்தால் தன் நிலைமை பற்றிச் சொல்லிக் கதறி அழும். முடியுடன் இறைந்துகிடக்கும் சீப்புகள், கன்னாபின்னா வென ஒட்டப்பட்ட பொட்டுகள், மூடப்படாத எண்ணெய் பாட்டில்கள், டேபிள் முழுக்கச் சிந்திய பவுடர், எண்ணெய் என அதன் நிலை ரொம்பவே பரிதாபமாக இருக்கும்.

சீப்புகளைச் சிறப்பாகப் பராமரியுங்கள்!
வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் நான்கு பேருக்கும் தனித்தனி சீப்பு... சாதாரண சீப்பு தவிர, ரோலிங் சீப்பு, பேன் சீப்பு, பிரஷ்... அத்தனையும் முடியோடு இறைந்துகிடக்கும். தலைவாரியதும் சீப்பில் உள்ள முடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும். ரோல் சீப்பில் உள்ள முடிகளை அப்புறப்படுத்துவது மிகவும் எளிது. ரோல் சீப்பின் இடையில் இன்னொரு சீப்பை வைத்துப் பரபரவென இழுத்தால் முடியெல்லாம் மேலே வந்துவிடும். வாரம் ஒருமுறை சீப்புகளைச் சிறிதளவு ஷாம்பூவில் ஊறவைத்துக் கழுவிப் பயன்படுத்தலாம். தேவையான சீப்புகளை மட்டும் ஒரு ஸ்டாண்டில் வைக்கலாம்.
தேவைக்கேற்ப வாங்குங்கள் பொட்டுகளை!
நிறைய பெண்களுக்கு விதம்விதமான பொட்டுகளின்மீது ஓர் ஆர்வம். விலை மலிவாகக் கிடைப்பதால் நினைத்த போதெல்லாம் வாங்கிக் குவிப்பார்கள். பொட்டுகளைக்கூடத் தேவைக்கேற்ப அழகாகப் பிரித்து வைக்கலாம். தினசரி உபயோகத்துக்கானவை, பார்ட்டி போன்ற விசேஷங்களுக்கு வைத்துக்கொள்பவை, குழந்தைகளுக்கான கலர் கலர் பொட்டு எனப் பிரித்துக் கொள்ளலாம்.
பொட்டுப் பாக்கெட்டுகளை ரொம்ப நாள் வைத்திருந்தால் பொட்டின் பின்னால் உள்ள பசை நீங்கிவிடும். இப்படிச் சேர்ந்துபோன பொட்டுப் பாக்கெட்டுகள் உபயோகமின்றிப் போவதைக் கவனிக்கத் தவறாதீர்கள். தேவைக்கேற்ப வாங்குங்கள். அவற்றை அவ்வப்போது எடுத்துப்பார்த்து, பசை இருப்பவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றை அப்புறப்படுத்திவிடலாம். பசையுடன் இருக்கும் அதிகப்படியான, உபயோகிக்காத பொட்டுப் பாக்கெட்டுகளை நவராத்திரி நேரத்தில் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கலாம்.
கண்டிப்பாகப் பிரித்து வையுங்கள் காஸ்ட்யூம் ஜுவல்லரியை!
காஸ்ட்யூம் ஜுவல்லரி என்கிற பெயரில் தங்கமல்லாத நகைகளை இன்று அநேகமான பெண்கள் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றையும் ரகவாரியாகப் பிரித்து வைப்பது நல்லது. அதாவது தோடுகள் தனியே, மோதிரங்கள் தனியே, கழுத்தணிகள் தனியே, வளையல்கள் தனியே எனப் பிரிக்க வும். அவற்றில் உபயோகிக்கும் நிலையில் உள்ளவற்றை மட்டும் எடுத்து வையுங்கள்.

மொத்தமாக எல்லா நகைகளையும் ஒரே பெட்டியில் குவித்து வைப்பதைத் தவிர்க்கவும். அப்படிப் போட்டு வைத்தீர்களா னால் தோடுகளுக்குத் திருகாணி கிடைக்காது; செயின்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொள்ளும்; வளையல்களில் அவற்றுக்கான செட் கிடைக்காது. இதைத் தவிர்க்க இன்று ஃபேன்ஸி ஸ்டோர்களில் பிரத்யேக டப்பாக்கள் கிடைக்கின்றன. அவற்றின் உள்ளேயே ஒவ்வொரு நகைக்குமான பிரிவுகள் இருக்கும். அதற்கேற்ப போட்டு வைக்கலாம். கல், முத்து வைத்த நகைகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் அவற்றின் பளபளப்பு போய்விடும். இதைத் தனித்தனியே வைத்தால் பளபளப்பும் குறையாது; தேவைப்படும்போது மேட்ச்சிங்காக எடுத்து உபயோகிப்பதும் எளிதாக இருக்கும். டப்பாக்கள் கிடைக்கவில்லை என்றாலும் கவலை வேண்டாம். வேறு வேறு அளவுகளில் டிஸ்போசபிள் ஜிப்லாக் கவர்கள் கிடைக்கும். ஒவ்வொரு செட்டையும் தனித்தனி கவரில் போட்டு வைத்தால் நகைகள் உரசிக்கொள்ளது; பராமரிப்பதும் எளிதாகும்
கண்ணாடிக் கீறல்கள்... தவிர்ப்பது எப்படி?
டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியைக் கூடிய வரையில் கீறல்கள் இன்றிப் பராமரிப்பது சிறந்தது. கண்ணாடியைத் துடைக்கவென்றே கிடைக்கும் பிரத்யேக திரவம் கொண்டு சுத்தப்படுத்தலாம். அது இல்லாதவர்கள் சாதாரண சோப்
புக் கரைசலைப் பயன்படுத்தலாம். துணியை வைத்துத் துடைக்காமல் பேப்பர் வைத்துத் துடைப்பதன் மூலம் கீறல்கள் விழுவதைத் தவிர்க்கலாம்.
பார்த்து உபயோகியுங்கள்... பவுடரை!
உடல் முழுக்க பவுடர் உபயோகிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. பவுடர் உபயோகிப்பதன் மூலம் சருமத் துவாரங்கள் அடைபடும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. பழகிவிட்டது என்பவர்கள், பெட்ரூமிலோ, வேறு அறைகளிலோ நின்றபடி பவுடர் தடவாமல், பாத்ரூமில் நின்று உபயோகிக்கலாம். பவுடரில் உள்ள நுண்ணிய துகள்களைக் குழந்தைகள் சுவாசிக்கக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். அது மாசு நிறைந்த தெருவில் நடந்துவிட்டு வருவதால் ஏற்படுகிற பாதிப்புக்கு இணையானது. குழந்தைகளுக்கு பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
சேஃப்டி பின்... ஒரு டஜன் போதுமே!
சேஃப்டி பின் தேடும்போது கிடைக்காது. தேவைப்படாதபோது கண்ட இடங்களிலும் கண்களில்படும். சிலர் டப்பா டப்பாவாக சேஃப்டி பின் வாங்கி வைத்திருப்பார்கள். சேலை கட்ட நான்கு பின்கள் போதும். ஒரு வீட்டில் ஒரு டஜன் பின்கள் வைத்திருந்தால் போதும். டப்பாவில் சேர்த்துவைத்த பின்களை எப்போதாவது எடுத்துக் குத்தினால் மழுங்கிப் போயிருக்கும்; துணிக்குள் இறங்காது. அளவில் சிறிய, கலர் கலரான பின்கள் இன்று கிடைக்கின்றன. அவற்றைத் தேவையான அளவு வாங்கி உபயோகிக்கலாம்.
க்ரீம், லோஷன்... கவனியுங்கள் காலாவதி தேதியை!
டிரஸ்ஸிங் டேபிளின் மேல் ஒரு துணியையோ, பேப்பரையோ விரித்து அதன்மேல் பொருள் களை வையுங்கள். எண்ணெயோ, க்ரீமோ சிந்தி, டேபிள் வீணாவதைத் தடுக்கலாம். தேவையா, இல்லையா என்றே யோசிக்காமல் வாங்கி அடுக்கிய க்ரீம், லோஷன், சீரம் உள்ளிட்ட அழகுச் சாதனங்களில் அவற்றின் காலாவதி தேதியைக் கவனித்து, ஆயுள் முடிந்தவற்றை அப்புறப்படுத்திவிடுங்கள்.
கொஞ்சம் மெனக் கெட்டுதான் பாருங் களேன்... சும்மாவே உங்கள் அழகைக் காட்டுக் காட்டு எனக் காட்டுகிற உங்கள் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி, இன்னும் சூப்பராகக் காட்டும்!
(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்)